கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன! தெளிவாக விளக்கிய மூத்த வழக்கறிஞர்
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரித் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஒரு முரணாகவே இருப்பதாகவும் இந்தத் தீர்ப்பு தனக்கு ஆச்சரியம் அளிப்பதாகவும் மூத்த வழக்கறிஞர் விஜயன் கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் வாரவாரம் சனிக்கிழமைகளில் பிரச்சாரம் செய்து வந்தார். கடந்த மாதம் கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். கரூரில் விஜய் பிரச்சாரம் செய்தபோது அவரை பார்க்கக் கூட்டம் அதிகளவில் திரண்டிருந்தது. அப்போது விஜய் வாகனம் வந்தபோது எதிர்பாராத விதமாகக் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கரூர் விவகாரம்
இது தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உச்ச நீதிமன்றம்
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு விசாரணைக் குழுவினர் இந்த வழக்கை மேற்பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து விசாரித்த சென்னை ஐகோர்ட் கூறிய கருத்துகளையும் உச்ச நீதிமன்றம் கண்டித்தது.
முரணாக இருக்கிறது
இது தொடர்பாக நியூஸ் 18 சேனலுக்கு மூத்த வழக்கறிஞர் விஜயன் கூறுகையில், "சட்டரீதியாக இதை நான் ஒரு முரணாகவே பார்க்கிறேன். இந்த வழக்கில் இரு விஷயங்களை நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். சிறப்புப் புலனாய்வுக் குழு இன்னும் விசாரணையைக் கூட தொடங்கவில்லை.. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடங்கி, அது தவறாகப் போகிறது என்றால் சிபிஐ விசாரணை கோரலாம். சிறப்புப் புலனாய்வுக் குழு இன்னும் விசாரணையைத் தொடங்காதபோது அது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
தேவையில்லை
இரண்டாவதாக சிபிஐ விசாரணை கோருவது அடிப்படை உரிமை என சொல்லியுள்ளனர். ஆனால், சிபிஐ விசாரணை கோருவது அடிப்படை உரிமை இல்லை அது equitable உரிமை மட்டுமே! சிபிஐ கோருவது அடிப்படை உரிமை என எங்கும் சொல்லப்படவில்லை. என்னைக் கேட்டால் அருணா ஜெகதீசன் ஆணையம் கூட அவசியம் இல்லை. ஒரு பக்கம் சிறப்புப் புலனாய்வுக் குழு, இன்னொரு பக்கம் அருணா ஜெகதீசன் ஆணையம் என இரு தரப்பு விசாரணை தேவையில்லை" என்று தெரிவித்தார்.
மேலும், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குழு சிபிஐ விசரணையை கண்காணிக்கும் என்பது சற்று மிகையாக இருப்பதாகவும் வழக்கு விசாரணையே இன்னும் தொடங்காத நிலையில், பாரபட்சம் என்பதற்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தவெக சொல்வது என்ன
இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தவெகவினர் வரவேற்று வருகிறார்கள். தவெக தலைவர் விஜய் நீதி வெல்லும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதேபோல அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் சிபிஐ விசாரணையை வரவேற்றுள்ளார். மேலும், இதன் மூலம் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications