அடுத்தடுத்து பள்ளிக்கரணையில் நடக்கும் விபத்துக்கள்.. அதிவேகத்தால் உயிரிழந்த ஐடி பெண் ஊழியர்
சென்னை: சென்னை அருகே கோவளம் கடற்கரையை சுற்றி பார்த்துவிட்டு ஐடி ஊழியர்கள் 4 பேர் அதிகாலை நேரத்தில் காரில் வந்துகொண்டிருந்தனர். பள்ளிக்கரணை அருகே கார் சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருந்தபோது அங்குள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பெண் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னையை அடுத்த ஓல்டு மகாபலிபுரம் சாலையில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன.
இந்த ஐடி நிறுவனங்களில் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் உள்ள ஏராளமான ஆண்களும் பெண்களும் பணியாற்றி வருகின்றனர்.

பெண் என்ஜினீயர்
அந்த வகையில் தென்காசி மாவட்டம் இலஞ்சியை சேர்ந்த காயத்ரி ( வயது 26) என்ற பெண் என்ஜினீயர் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தான் பணியாற்றும் அதே நிறுவனத்தில் வேலை செய்யும் என்ஜினியர்களான ரகுராம் (வயது 25), தினேஷ்குமார் (வயது 28), அஸ்வின் (வயது 29) ஆகியோருடன் காயத்ரி கோவளம் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

கோவளம் கடற்கரையை சுற்றி பார்த்துவிட்டு
கோவளம் கடற்கரையை சுற்றி பார்த்துவிட்டு அதிகாலை நேரத்தில் காரில் 4 பேரும் திரும்பியுள்ளனர். காரை அஸ்வின் ஓட்டி வந்துள்ளார். பள்ளிக்கரணை நோக்கி கார் சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள பொன்மார் பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. தொடர்ந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்பக்கம் நொறுங்கியது.

4 பேரும் படுகாயம்
கண்ணாடிகள் சிதறின. இந்த பயங்கர விபத்தில் காயத்ரி உள்பட காரில் வந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த சக வாகன ஓட்டிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மது அருந்தியிருந்ததாக..
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் காயத்ரி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ரகுராம், அஸ்வின், தினேஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரை அதிவேகமாக ஓட்டி வந்ததால் தான் இந்த விபத்து நடைபெற்றதாகவும் காரில் வந்தவர்கள் மது அருந்தியிருந்ததாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் சிலர் கூறினர்.

கடந்த வாரம் இதேபோன்று ஒரு விபத்து
பள்ளிக்கரணை பகுதியில் கடந்த வாரம் இதேபோன்று ஒரு விபத்து நடைபெற்று பெண் என்ஜினியர் பலியானார். அதிவேகத்தில் சாலை விதிகளை மீறி செல்வதால் இதுபோன்ற விபத்துக்களில் ஐடி ஊழியர்கள் அடிக்கடி சிக்குவதாகவும் குறிப்பாக வார இறுதி நாட்களில் இதுபோன்ற விதிமீறல்கள் நடப்பதாகவும் அப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். இதனால், போலீசார் கூடுதல் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டால் மட்டுமே இதுபோன்ற விபத்துக்களை குறைக்க முடியும் என்பது அப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications