Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாதிவாரி கணக்கெடுப்பில் ஆதிதிராவிடர் என்ற பெயரில் பதிவுசெய்ய வேண்டும்.. விசிக எம்.பி எழுப்பும் குரல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பட்டியல் சமூக மக்களுக்கு இருக்கும் ஒரே பலம் எண்ணிக்கை பலம்தான். அதை மீட்டுக் கொள்வதற்கு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை (Caste census) அவர்கள் பயன்படுத்த வேண்டும். நீதிக்கட்சி ஆட்சியின்போது வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில் அனைவரையும் சாதி கடந்த அடையாளமான 'ஆதிதிராவிடர்' என்ற ஒரே பெயரில் அழைப்பதற்குத் தமிழ்நாடு அரசை வலியுறுத்த வேண்டும்." என விசிக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதி விசிக எம்.பி ரவிக்குமார், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்ட வினாப் படிவத்தில் எஸ்சி, எஸ்டி சாதிகள் தவிர பிற சாதிகளின் விவரங்கள் கேட்கப்படவில்லை. இதை காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி மத்திய அரசை விமர்சித்துள்ளன. பாஜக அரசு, தான் அறிவித்ததைப் போல சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமா என்ற ஐயத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி உள்ளன.

Caste based Census Can Restore Dalit Power Says VCK MP D Ravikumar

இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்படவில்லை. 2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கோவிட் பெருந்தொற்றைக் காரணம் காட்டி ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அந்தக் காரணம் உண்மையானது அல்ல. ஏனென்றால், அந்தக் காலத்தில் பல்வேறு மாநிலங்களில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கெல்லாம் கோவிட் பெருந்தொற்று தடையாக இருக்கவில்லை. எனவே, அதைக் காரணம் காட்டி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தாமல் பாஜக அரசு சாக்குபோக்கு சொல்லியதை எவரும் ஏற்கவில்லை.

பாஜக அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தாமல் தள்ளிப் போட்டதற்குக் காரணம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது தான். எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பாஜக கூட்டணியில் இருந்த கட்சிகளும்கூட சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும் படி நிர்பந்தித்தன. குறிப்பாக பீகார் மாநிலத்தில் அது ஒரு முக்கியமான அரசியல் பிரச்சனையாக மாறியது.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பெற முடியவில்லை. அது பீகாரில் உள்ள நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் ஆதரவில்தான் ஆட்சி அமைத்தது.

ஐக்கிய ஜனதா தளம் பீகாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவோம் என்ற வாக்குறுதியை அளித்துத்தான் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தது. ஒன்றிய பாஜக அரசு ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவோடு ஆட்சி செய்கிறது என்ற நிலையில் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான அறிவிப்பைச் செய்யுமாறு அது வலியுறுத்தியது. மாநில அளவில் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு மேற்கொண்ட சாதிவாரி சர்வேயை நீதிமன்றங்கள் நிராகரித்ததால் சாதிவாரிக் கணக்கெடுப்பை இந்திய ஒன்றிய அரசுதான் மேற்கொண்டாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

2025 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை பீகார் மாநிலம் சந்திக்க இருந்த நிலையில், ஒன்றிய அரசை ஆட்சி செய்யும் பாஜக பீகாரில் ஐக்கியதான தளத்துடன் கூட்டணி அமைத்தது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டாக வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு பாஜக தள்ளப்பட்டது.

அதுவரை சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை 'மக்களை பிளவுபடுத்தும் பிரிவினைவாதக் கோரிக்கை' என்று கூறி வந்த பாஜக தனது நிலையை மாற்றிக் கொண்டு அதற்கு நேர் எதிராக, சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்வோம் என்று அறிவித்தது. 2021 ஆம் ஆண்டிலிருந்து ஒத்தி போடப்பட்டு வந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027 இல் சாதிவாரிக் கணக்கெடுப்பாக மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பை ஒன்றிய பாஜக அரசு வெளியிட்டது.

இந்த அறிவிப்பு பாஜக மனம் விரும்பி செய்த ஒன்று அல்ல. மாறாக, கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் நிர்பந்தத்தாலும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் அதை இந்திய அளவில் ஒரு பிரச்சார ஆயுதமாகக் கையில் எடுத்த காரணத்தாலும், பீகார் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியாலும்தான் இந்த முடிவை அது அறிவித்தது. எனவே சாதிவாரிக் கணக்கெடுப்பை அது மேற்கொள்ளுமா என்ற ஐயம் இப்போதும் மக்களிடையே இருக்கிறது.

இப்போது இந்தியாவில் மேற்கொள்ளப்படவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கியதிலிருந்து 16ஆவது கணக்கெடுப்பு ஆகும். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வரை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சாதிவாரிக் கணக்கெடுப்பாகவே இருந்தது. ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடிகள் மட்டும் சாதி வாரியாகக் கணக்கெடுப்புச் செய்யப்பட்டன. 2027 இல் ஒன்றிய அரசு மேற்கொள்ளப்போவதாகச் சொல்லியிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புதான் சுதந்திர இந்தியாவில் நடைபெறப் போகும் முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பாகும்.

2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி இருந்த போது, சமூகப் பொருளாதார சாதி கணக்கெடுப்பு ஒன்றை அது மேற்கொண்டது. ஆனால் அந்த விவரங்களை ஒன்றிய அரசு வெளியிடவில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அந்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த பாஜக, 2014 இல் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு அந்த விவரங்களை வெளியிட முன்வரவில்லை. அந்தக் கணக்கெடுப்பில் இந்தியாவில் லட்சக்கணக்கான சாதிகள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டு இருப்பது தான் அந்தக் கணக்கெடுப்பை வெளியிடாததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1931இல் மேற்கொள்ளப்பட்ட கடைசி சாதிவாரிக் கணக்கெடுப்பின் போது இந்தியாவில் மொத்தம் 4,147 சாதிகள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமூக பொருளாதார சாதிக் கணக்கெடுப்பில் 46 லட்சத்துக்கும் மேற்பட்ட சாதிகள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

'சாதிவாரிக் கணக்கெடுப்பினால் எஸ்சி மக்களுக்குப் புதிதாக எந்தப் பயனும் வரப்போவதில்லை, ஓபிசி மக்களுக்குத்தான் இதனால் லாபம்' என்ற கருத்து எஸ்சி மக்களிடையே பரவலாக உள்ளது. அவர்கள் அவ்வாறு அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பை பிற மாநிலங்களில் உள்ள எஸ்சி மக்கள் எப்படி பார்த்தாலும் தமிழ்நாட்டிலுள்ள ஆதிதிராவிட மக்கள் முக்கியமான வாய்ப்பாகக் கருத வேண்டும். ஏனென்றால் 1931 சாதிவாரிக் கணக்கெடுப்பின்போதுதான் அவர்களது எண்ணிக்கை பலம் குறைக்கப்பட்டது. அதை சரிசெய்துகொள்ள இதுவே சரியான தருணமாகும்.

பெருந்தலைவர் எம்.சி ராஜா அவர்களின் பெருமுயற்சியால் சமூகத்தில் இழிவாகக் கருதப்பட்டுவந்த பறையர், பஞ்சமர் என்ற பெயர்களை நீக்கி அவர்கள் அனைவரையும் ஆதிதிராவிடர் என்று சாதி அடையாளமில்லாத தொன்மையான இன அடையாளத்தால் அழைக்கவேண்டும் என 1922 இல் அன்றைய நீதிக்கட்சி அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கான தீர்மானத்தை அன்றைய சட்ட மேலவையில் 1922 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் நாள் திரு எம் சி ராஜா அறிமுகப்படுத்திய போது அதை எம்.சி.மதுரப் பிள்ளை, நம்பெருமாள் செட்டி உள்ளிட்டோர் வரவேற்றனர். அது அங்கு நிறைவேற்றப்பட்டது.

ஆனால், 1931இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட போது அப்போது இருந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரி 'ஒவ்வொரு நபரும் தாம் எந்த சாதி என்று குறிப்பிடுகிறாரோ அதைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்' என்று உத்தரவிட்டதன் காரணமாக, பறையர் என்ற பழைய பெயரிலேயே சிலரும் ஆதிதிராவிடர் என்ற புதிய பெயரில் சிலரும் அதில் பதிவு செய்து கொண்டனர். இதனால் அதற்கு முன்பு வரை சென்னை மாகாணத்தில் எண்ணிக்கையில் பெரிய இரண்டாவதாக இருந்த பறையர் சமூகம், ஆதிதிராவிடர்- பறையர் எனப் பிரிந்து சிறிய சாதிகளாக மாற்றப்பட்டது.

இதனால் அந்த மக்களின் எண்ணிக்கை பலம் சிதறடிக்கப்பட்டது. பறையர், பஞ்சமர் என்ற பெயர்களில் அவர்களை அழைக்கக்கூடாது என்ற அரசாணை இருந்தும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அந்தப் பெயர்களில் சாதிகள் பட்டியலிடப்பட்டதால் இந்தப் பெயர்கள் இன்றுவரை சட்டவிரோதமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதனிடையே ஆதி திராவிட மக்கள் எவ்வளவோ போராடியும் ஒரே பெயரில் அவர்களை அழைக்க சுதந்திரத்திற்குப் பிறகான ஒன்றிய, மாநில அரசுகள் முன்வரவில்லை.

பட்டியல் சமூக மக்களுக்கு இருக்கும் ஒரே பலம் எண்ணிக்கை பலம்தான். அதை மீட்டுக் கொள்வதற்கு இந்த சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அவர்கள் பயன்படுத்த வேண்டும். நீதிக்கட்சி ஆட்சியின்போது வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில் அனைவரையும் சாதி கடந்த தொன்மையான அடையாளமான 'ஆதிதிராவிடர்' என்ற ஒரே பெயரில் அழைப்பதற்குத் தமிழ்நாடு அரசை வலியுறுத்த வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+