தமிழ்நாடு மாறல.. எடப்பாடி Vs அண்ணாமலை, நயினார் Vs டிடிவி! கூட்டணிகள் உடைந்த சீக்ரெட்!
சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில் மீண்டும் சலசலப்பு எழுந்திருக்கிறது. அண்ணாமலை எடப்பாடி இடையே மோதல், டிடிவி தினகரன் நயினார் நாகேந்திரன் இடையே மோதல் என அடுத்தடுத்த சிக்கல்களால் தேர்தல் வரை அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. எடப்பாடியும் அண்ணாமலையும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், நயினார் நாகேந்திரனும் டிடிவி தினகரனும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் யார் பெரியவர்? என்ற ஈகோவே இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் என்கின்றனர் பாஜகவினர்.
2026 தேர்தலுக்கு ஒரு ஆண்டு இருக்கும்போதே முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக பாஜக அதிமுக கூட்டணி அறிவிக்கப்பட்டது. பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமித்ஷா அதிகாரப்பூர்வமாக கூட்டணியை அறிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக விவகாரங்களில் பாஜகவின் தலையீடு அதிகமாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்படும் நிலையில் 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.

அதிமுக பாஜக
தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் விழுந்தது. தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற உடனேயே அதிரடியாகப் பேசத் துவங்கினார் அண்ணாமலை. குறிப்பாக அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற அதிமுகவின் தலைவர்களைக் குறி வைத்துப் பேசியது அதிமுக தொண்டர்களை ரசிக்க வைக்கவில்லை. அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அண்ணாமலைக்குப் பதிலடி கொடுத்து வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அமைதி காத்து வந்தார்.
எடப்பாடி பழனிசாமி
ஒரு கட்டத்தில் விமர்சனங்கள் அதிகமாக பாஜக கூட்டணி உடைவதாக அறிவித்தார் ஜெயக்குமார். பாஜகவுடன் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது என வெளிப்படையாகவே பேசினார் எடப்பாடி. அதன்பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக இல்லாமல் போட்டியிட்டது அதிமுக. பாஜகவும் தோற்றது, அதிமுகவும் தோற்றது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் திமுக வென்றது. இதை அடுத்து அதிமுக பாஜக கூட்டணி அமைந்திருந்தால் கணிசமான தொகுதிகளை வென்றிருக்கலாம் என இரு தரப்பிலும் பேசப்பட்ட நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடு பிடித்தன.
அண்ணாமலை
அதே நேரத்தில் அண்ணாமலை இருந்தால் கூட்டணிக்கு வரமாட்டோம் என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கூறிய நிலையில் அவர் மாற்றப்பட்டார். அதன் பிறகு அதிமுக பாஜக கூட்டணி உருவானது. தன்னை விலக்கிவிட்டு எடப்பாடியுடன் கூட்டு சேர்ந்ததால் அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே அதிமுகவிலிருந்து பாஜகவுக்குத் தாவிய நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டார். ஒரு காலத்தில் சசிகலா டிடிவி தினகரன் தீவிர ஆதரவாளராக இருந்த நயினார் நாகேந்திரன் அதற்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானார்.
நயினார் நாகேந்திரன்
பின்னர் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்ற தலைவரான அவர் டெல்லி மூலம் தமிழக பாஜக தலைவர் பதவியையும் கைப்பற்றினார். இதற்கிடையே கூட்டணியில் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்துவதால் டிடிவி தினகரனுக்கும் நயினார் நாகேந்திரனுக்கும் மோதல் வெடித்தது. இதனால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார்.
இதில் ஒரு முக்கிய விஷயத்தைப் பார்க்க வேண்டும். அண்ணாமலையும் எடப்பாடியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். டிடிவி தினகரனும் நயினார் நாகேந்திரனும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
சாதி மோதல்
*சமுதாய ரீதியாக தனக்குத்தான் செல்வாக்கு இருக்கிறது என்பதை காட்டிக்கொள்ள எடப்பாடி-அண்ணாமலை இடையே ஏற்பட்ட மோதல்தான் பாஜக கூட்டணி முதலில் உடைவதற்குக் காரணம்.
*கடந்த காலங்களில் சசிகலாவுக்கும் தனக்கும் விசுவாசியாக இருந்த நயினார் நாகேந்திரன் தற்போது எடப்பாடி பழனிசாமியைத் தாங்கிப் பிடிக்கிறார் என்பதுதான் டிடிவி தினகரன் கூட்டணியை விட்டு வெளியேறக் காரணம்.
ஒரே ஜாதியைச் சேர்ந்த இரு தலைவர்கள் ஒரு சேர வளர்வதை தாங்களே ரசிக்கவில்லை என்றும் இதை எடுத்துக்கொள்ள முடியும். ஜாதி வாக்கு வங்கிக்காக பயன்படுத்தப்படுவதால் தங்கள் ஜாதி ஓட்டு தங்களுக்கே என நினைக்கிறார்கள் தலைவர்கள்.
இப்படி சாதி அரசியலால் அதிமுகவிலும், அதிமுக கூட்டணியிலும் பிரச்சினை வெடித்திருக்கும் நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அது சரியாகுமோ அல்லது கூட்டணியை உடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications