சாதியை தூக்கிப் பிடிப்பது தவறில்லை.. ஆனால்.. நடிகர் எஸ்வி சேகர் பரபரப்பு பேச்சு
சென்னை: சாதியை தூக்கிப் பிடிப்பது தவறில்லை. அடுத்த சாதியை தவறாகப் பேசாதீங்க என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். சினிமாவில் சாதி ரீதியான படங்களை எடுப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எஸ்.வி.சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் தான் இத்தனை சாதி, மதம், மொழி இருக்கிறது. இந்தியாவை போன்ற உலகின் சிறந்த நாடு இல்லை. அப்படி இருக்கும்போது எப்போதோ 100,150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவற்றை எல்லாம் பேசக்கூடாது. யாரோ தாத்தாவுடைய தாத்தா செய்த தவறுக்காக அவரது கொள்ளுப் பேரனை எப்படி ஜெயிலில் போடமுடியும்? என்று எஸ்வி சேகர் கேள்வி எழுப்பி உள்ளார்.

அறிமுக இயக்குநர் அஜித்குமார் இயக்கத்தில் கிஷோர் நடித்துள்ள 'முகை' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் எஸ்வி சேகர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்த முகை நல்ல தமிழ் படம், சின்ன படம் வெற்றி பெறுவது சினிமாவிற்கு நல்லது, தயாரிப்பாளர்களுக்கு குறைந்த லாபம் வந்தால் கூட அது சிறந்த படமாக இருக்கும்.
இன்னொரு முக்கியமான விஷயம் நான் பார்த்துட்டேன். அரசியலுக்கு அடுத்து சினிமாவில் தான் நேரத்தை சரியாக கடைபிடிப்பது இல்லை. தயாரிப்பாளர்கள் படத்தை எடுத்துவிட்டு வீட்டை விற்கும் நிலையும், அதில் நடித்தவர்கள் வாங்கும் நிலையும் வரக்கூடாது. வயிற்றெறிச்சல் மற்றும் சாபத்தால் அது நம் கையை விட்டு போய்விடும். நேர்மையாக சம்பாதித்தால் அந்த பணம் நம்மிடம் இருக்கும்.
80கள், 90களில் படத்தின் தொடக்கத்தின் கடவுளை காட்டுவார்கள். ஆனால் இப்போது சியர்ஸ் என்று டாஸ்மாக்கில் குடிப்பதை காட்டுகிறார்கள். டாஸ்மாக்-க்கு ஏன் பப்ளிசிட்டி கொடுக்கிறீர்கள்? ஏதோ கோகோ கோலா பாட்டிலை கையில் வைத்துக்கொண்டால் ஐந்து லட்சம் கொடுக்கிறார்கள் ஹீரோவுக்கு என்றால் ஒகே. எதுக்காக டாஸ்மாக் பாட்டிலை தலையில் வைத்து ஆடுறீங்க.. இது எல்லாருக்கும் பிடிக்கும் ஒகே.. சரி நாளைக்கு உங்க பிள்ளைங்களுக்கு பிடிச்சு போய் குடிகாரங்க ஆய்ட்டா என்ன பண்ணுவீங்க..
அடுத்தவர்களை வாழ வைக்கும் சினிமாவை எடுத்தால் அவர்கள் குடும்பம் நன்றாக இருக்கும். வெறும் பணத்திற்காக என்னவேண்டுமானாலும் எடுத்து சமூகத்தை கெடுப்பேன் என்றால், முதலில் பாதிப்பு ஏற்பட்டு அழிவை கொடுக்ககூடியது அவர்களது குடும்பத்திற்குத்தான் இருக்கும்.
அதே போல சினிமாவில் சாதிரீதியான படங்களை எடுப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். எல்லா சாதி மக்களும் பார்க்க வேண்டும் என்றால் எல்லா சாதி மக்களுக்கும் பிடிக்கும்படி படத்தை எடுங்கள். சாதியை தூக்கிப் பிடிப்பது தவறில்லை. அடுத்த சாதியை தவறாகப் பேசாதீர்கள். இந்தியாவை போன்ற உலகின் சிறந்த நாடு இல்லை. இந்தியாவில் தான் இத்தனை சாதி, மதம், மொழி இருக்கிறது. இது போன்று வேறு எந்த நாட்டிலும் கிடையாது. அப்படி இருக்கும்போது எப்போதோ 100 வருசம் முன்னாடி நடந்தது,150 வருசம் முன்னாடி நடந்ததை எல்லாம் பேசக்கூடாது. யாரோ தாத்தாவுடைய தாத்தா செய்த தவறுக்காக அவரது கொள்ளுப் பேரனை எப்படி ஜெயிலில் போடமுடியும்?" இவ்வாறு எஸ்வி சேகர் பேசினார்.












Click it and Unblock the Notifications