திடீரென கொண்டாடப்படும் ரத்னவேல் கதாபாத்திரம்.. வெடித்த மாமன்னன் சர்ச்சை.. வன்னியரசு எச்சரிக்கை
சென்னை: மாமன்னன் படத்தின் ரத்னவேல் கதாபாத்திரத்தை சாதியவாதிகள் கொண்டாடி வருகிறார்கள் என்றும், சாதியவாதிகளுக்கு பதற்றம் பீறிட்டு,என்ன செய்வது என தெரியாமல் பிதற்றி வருகிறார்கள் என்றும் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு எச்சரிக்கைவிடுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மாமன்னன் திரைப்படத்தில் வரும் ரத்னவேல் காதாபாத்திரத்தில் பகத் பாசில் நடித்திருப்பார். சாதி வெறியராகவும், சாதிய ஆணவத்துடன் நடந்து கொள்பவராகவும் அற்புதமாக நடித்திருப்பார். மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்காக ரத்னவேல் கதாபாத்திரத்தில் நடித்த பகத் பாசில் மிக முக்கியமான காரணம் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.

படத்தில் அற்புதமாக நடித்த வடிவேலு உதயநிதி மற்றும் சிறப்பாக இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும், ரத்னவேல் கதாபாத்திரத்தில் நடித்த பகத் பாசில் நடிப்பு தற்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாமன்னன் கதைகளம் மேற்கு மாவட்டமான சேலத்தை மையமாகவைத்தும் ராசிபுரம் தொகுதியை மையமாக வைத்தும் எடுக்கப்பட்டடிருந்தது. எந்த சாதி என்று எதிலுமே வராது. இந்நிலையில் ஞாயிற்றுகிழமையான நேற்று ரத்னவேல் கதாபாத்திரத்தின் செயல்களை எடிட் செய்து வீடியோ வெளியிட்டு பலரும் தங்கள் சுயசாதி பெருமைகளுடன் பிஜிஎம் போட்டு வீடியோ பதிவிட்டார்கள். இந்த எடிட்டிங் செய்த வீடியோக்கள் தான் கடந்த இரண்டு நாட்களாக பேசு பொருளாக உள்ளது.
இந்நிலையில் மாமன்னன் படத்தின் ரத்னவேல் கதாபாத்திரத்தை சாதியவாதிகள் கொண்டாடி வருகிறார்கள் என்றும், சாதியவாதிகளுக்கு பதற்றம் பீறிட்டு,என்ன செய்வது என தெரியாமல் பிதற்றி வருகிறார்கள் என்றும் விசிக பொதுச்செயலாளர் வன்னியரசு குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இது எச்சரிக்கை பதிவு மாமன்னன் திரைப்படம் வெளிவந்ததிலிருந்து
சாதியவாதிகளுக்கு பதற்றம் பீறிட்டு,என்ன செய்வது என தெரியாமல் பிதற்றி வருகிறார்கள். வெளிவந்த நாளில் தென்மாவட்டங்களில் தியேட்டர்களை முற்றுகையிட்டன சாதியவாதிகள்.

அப்புறம் தான் கதைக்களமே தென்மாவட்டம் இல்லை என தெரிந்து தலையை சொறிந்து கொண்டனர்.இப்போது ரத்னவேல் கதாபாத்திரத்தை சாதியவாதிகள் கொண்டாடி வருகின்றனர்.அதாவது,நாயை படுகொலை செய்வதை கொண்டாடுவது, சொந்த சாதிக்காரனையே படுகொலை செய்வதை கொண்டாடுவது என சாதிய மனநோயாளிகளாக மாறுகின்றனர்.
அதுவும் அவரவர் சாதிகளை இணைத்து சாதிப்பெருமையோடு பதிவிட்டு வருகின்றனர். இதில் சாதியவாதிகளுக்கு மகிழ்ச்சி என்பது தற்காலிகம் தான். ஏனெனில், சாதியவாதியான ரத்னவேலுக்கு ஏற்படும் சோக முடிவை யாரும் மறந்திருக்க முடியாது. சாதியவாதிகளுக்கு நாளை இந்த முடிவுதான் ஏற்படும் என்பதை இயக்குனர் மாரிசெல்வராஜ் எச்சரித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்." இவ்வாறு கூறியுள்ளார்.
இதனிடையே வன்னியரசு போல் பலரும் மாரிசெல்வராஜ்க்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.சாதியவாதிகள் ரத்னவேல் கதாபாத்திரத்தை கொண்டாடுவதற்கு பதிலடியும் கொடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications