மேகதாது அணை கட்டியே தீருவாராம்.. வம்பிழுத்த கர்நாடகா சித்தராமையா-வரிந்து கட்டிய வைகோ, டிடிவி தினகரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என அறிவித்த கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கை: கர்நாடக சட்டமேலவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் பெலகாவியில் கடந்த 2023, டிசம்பர் 14 அன்று நடைபெற்றது. மேகதாது திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார் பதிலளித்து பேசினார். அதில் அவர், " 'நமது நீர், நமது உரிமை' என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாம் போராடுவோம். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதால் நம்மை விட தமிழகத்திற்கு தான் அதிக நன்மை கிடைக்கும்.நமக்கு 400 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்ய வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில், தமிழகத்திற்கு கூடுதல் நீர் கிடைக்கும். மேகதாது திட்டத்தைச் செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். இந்தத் திட்டத்தை நமது மண்ணில் செயல்படுத்தினாலும், மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். மாண்டியா, மைசூரு, பெங்களூரு உட்பட பல நகரங்களுக்கு குடிநீர் விநியோகிக்கும், மின்சாரம் உற்பத்தி செய்யும் மேகதாது திட்டத்தை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.

Cauvery: Vaiko, TTV Dhinakaran condemn Karnataka on Mekedatu Dam Row

கர்நாடகா பட்ஜெட் உரையில் சித்தராமையா: இதன் தொடர்ச்சியாக, இன்று (பிப்ரவரி-16 ) கர்நாடக சட்டப் பேரவையில் முதலமைச்சர் சித்தராமையா மாநில அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசும் போது, "காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மேகதாது அணையைக் கட்ட ஒரு தனி மண்டலக் குழு, இரண்டு துணை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்து இருக்கிறார்.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது: கர்நாடக முதல்வரின் இந்த அறிவிப்பு, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானதாகும். காவிரியில் நீரைத் தடுத்து, 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 67.14 டி.எம்.சி. நீர் கொள்ளளவு கொண்ட மேகேதாட்டு அணையைக் கட்டவும், 400 மெகாவாட் நீர் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கவும் கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. இதை அனுமதித்தால் தமிழகத்தின் காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும்.

மேகதாதுவால் என்ன பாதிப்பு?: கடந்த 48 ஆண்டுகளில் 15.87 லட்சம் ஹெட்டேர் நிலம் சாகுபடி பரப்பை நாம் இழந்துள்ளோம். ஆனால் கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 9.96 இலட்சம் ஹெக்டேரிலிருந்து 38.25 இலட்சம் ஹெக்டேராக அதிகரித்துவிட்டது. தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பறித்து வரும் கர்நாடகா, மீண்டும் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று முனைந்திருப்பதும், திட்டத்தைச் செயற்படுத்த குழுக்கள் அமைத்துள்ளதாக முதல்வர் சித்தராமையா குறிப்பிட்டு இருப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியதாகும். கர்நாடகம், நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறுவதை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: கர்நாடக மாநில நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த அம்மாநில முதலமைச்சர் திரு.சித்தராமையா அவர்கள், மத்திய அரசின் அனுமதியை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும் எனவும், அணைகட்டும் பணிகளை மேற்கொள்ள பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக மேகதாது அணை குறித்து நடைபெற்ற விவாதத்தில் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றது விவசாயிகளுக்கு இழைத்த மாபெரும் துரோகம் ஆகும்.

முதல்வருக்கு வேண்டுகோள்: தமிழ்நாட்டின் ஜீவாதாரமான காவிரி நதிநீர் விவகாரத்தில், இதயதெய்வம் அம்மா அவர்கள் நடத்திய தொடர் சட்டப் போராட்டத்தினால் பெற்ற உரிமையை காக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. எனவே, டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை சட்டரீதியாக தடுத்து நிறுத்துவதோடு, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் ரத்து செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+