சிக்கினால் சிறை.. டிரைவரோடு தலைமறைவான பூவை ஜெகன்மூர்த்தி.. நெருங்கிய CBCID.. விறுவிறு விசாரணை
சென்னை: புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு நெருக்கமானவர்களை அழைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்கின்றனர். விசாரணை மூலம் ஜெகன்மூர்த்தியை கைது செய்ய CBCID தீவிரம் காட்டி வருகிறது.
சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவை ஜெகன்மூர்த்தி மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தை நாடி இருக்கிறார். இந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் ஆள் கடத்தல் வழக்கில் தலைமறைவான ஜெகன்மூர்த்திக்கு நெருக்கமானவர்களை அழைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஜெகன்மூர்த்தியைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் கார் ஓட்டுநரும் தற்போது தலைமறைவாக உள்ளதால் சைபர் கிரைம் காவல்துறை உதவியுடன் போன் தரவுகளை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை தேடி வருகின்றனர்.
வழக்கின் பின்னணி
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன்மூர்த்தி மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து, காவல்துறையினர் ஜெகன்மூர்த்தியை விசாரிக்க சென்றபோது, அவரது ஆதரவாளர்கள் காவல்துறையினரை உள்ளே அனுமதிக்காமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவானார்.
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் சிக்கியது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த வனராஜா, பலரிடம் உதவி கேட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் மணிகண்டனிடம் தனது கஷ்டங்களை கூறியுள்ளார். மணிகண்டன், கொடைக்கானலைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்ணை வனராஜாவுக்கு அறிமுகம் செய்துள்ளார்.
இந்த மகேஸ்வரிதான் பூவை ஜெகன்மூர்த்தியிடமும், ஏடிஜிபி ஜெயராமிடமும் தொலைபேசியில் பேசியுள்ளார். அந்த காதல் திருமணம் பற்றியும்.. மகளை கடத்தி மீட்க வேண்டும் என்றும் பேசி உள்ளார். மகேஸ்வரி கூறியதன் அடிப்படையில், வனராஜாவுக்கு உதவ ஜெகன்மூர்த்தியும், ஜெயராமும் முடிவு செய்துள்ளனர்.
இவர்களின் ஏற்பாட்டின் பெயரில் கூலிப்படையினர் மூலம் அந்த இளைஞரின் வீட்டிற்கு சென்று காதல் ஜோடியை கடத்த முயன்று உள்ளனர். ஆனால் காதல் ஜோடி வீட்டில் இல்லாத காரணத்தால்.. அந்த இளைஞரின் சகோதரரை வனராஜா குடும்பம் கடத்தியுள்ளது. அந்த இளைஞரின் சகோதரர் TN 06 G 0606 என்ற எண் கொண்ட போலீஸ் வாகனத்தில் கடத்தப்பட்டார்.
மகேஸ்வரியின் தொலைபேசி உரையாடல்
இதையடுத்து அந்த இளைஞரின் குடும்பம் காவல்துறையில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். விசாரணையில் வனராஜா கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மகேஸ்வரி சிக்கினார். மகேஸ்வரியிடம் விசாரிக்க விசாரிக்க போலீசாருக்கு அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தன. அவரிடம் போலீஸ் வாகனம் எப்படி வந்தது என்று விசாரித்தபோது, ஏ.டி.ஜி.பி ஜெயராமுக்கு இதில் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஏ.டி.ஜி.பி ஜெயராமன், பூவை ஜெகன் மூர்த்தி இந்த கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
காவல்துறையினர் மகேஸ்வரியின் தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்ததில், ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம், மகேஸ்வரி ஆகியோர் பேசியதற்கான பதிவுகள் இருந்தன.அடிக்கடி இவர்கள் போனில் பேசி உள்ளனர்.
மகேஸ்வரி அளித்த வாக்குமூலத்தில், "ஏடிஜிபி ஜெயராம் எனக்கு உறவினர். அவர்தான் போலீஸ் வாகனத்தை என்னிடம் கொடுத்தார்" என்று கூறியிருந்தார். இது ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட முக்கிய காரணமாக அமைந்தது. ஏடிஜிபி ஜெயராம், பூவை ஜெகன்மூர்த்தி இருவரும் மகேஸ்வரியுடன் தொலைபேசியில் பேசிய ஆதாரங்கள் இருப்பதால் இந்த வழக்கும் வலிமை அடைந்துள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications