Tamil nadu SIR: இரவோடு இரவாக முடக்கப்படும் தமிழக வாக்காளர் பட்டியல்.. என்ன காரணம்! அடுத்து என்ன நடக்கும்!
சென்னை: பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் சார் எனப்படும் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதற்கிடையே சார் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் இன்றிரவு முதல் முடக்கப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சார் எனப்படும் சிறப்புச் சீர்திருத்த நடவடிக்கையைத் தொடர்ந்து நாட்டின் பல மாநிலங்களில் சார் நடவடிக்கையை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அது குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையத் தலைவர் ஞானேஷ் குமார் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

முடக்கப்படும்
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அந்தமான் மற்றும் நிக்கோபார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், லட்சத்தீவு, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 12 மாநிலங்களில் சார் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், சார் பணிகள் நடக்கும் இந்த 12 மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் இன்று நள்ளிரவு 12 மணிக்கு முடக்கப்படும் என்றும் அதைத் தொடர்ந்து சிறப்புத் திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஞானேஷ் குமார் மேலும் கூறுகையில், "சிறப்புத் திருத்த நடவடிக்கை நடைபெறும் மாநிலங்களுக்கான வாக்காளர் பட்டியல் இன்று நள்ளிரவு 12 மணிக்கு முடக்கப்படும். அதன் பிறகு அதில் மாற்றங்கள் செய்யப்படாது. அதைத் தொடர்ந்து, வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் இருக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும், தனித்துவமான கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்படும்.
தேர்தல் ஆணையர் தகவல்
இந்தப் படிவங்களில் இப்போது வாக்காளர் பட்டியலில் இருப்போரின் அத்தியாவசிய விவரங்களும் இடம் பெற்றிருக்கும். அதன் பிறகு வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் 2003ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதைச் சரிபார்க்கலாம். 2003 பட்டியல், தற்போதைய வாக்காளர் பட்டியல் என இரண்டிலும் பெயர் இருந்தால் வேறு எந்தவொரு கூடுதல் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை" என்றார்.
என்ன செய்ய வேண்டும்
2003ல் மைனராக இருந்தவர்கள் பல லட்சம் பேர் அதன் பிறகு வாக்குரிமை பெற்றிருப்பார்கள். 2003 வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் இருக்காது. ஆனால், தற்போதைய பட்டியலில் இருக்கும். அப்போது இவர்களும் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமா என்ற சந்தேகம் பலருக்கும் வரும். இது குறித்தும் தேர்தல் ஆணையர் தெளிவான விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.
தேர்தல் ஆணையர் இது குறித்துக் கூறுகையில், "ஒருவேளை வாக்காளர் பெயர் இல்லாமல் பெற்றோரின் பெயர்ப் பட்டியலில் இருந்தாலும், அவர்களும் எந்தவொரு கூடுதல் ஆவணங்களையும் வழங்கத் தேவையில்லை. பெற்றோரின் பெயர் இரு ஆவணங்களிலும் இருப்பதால் அதுவே போதுமானது" என்றார். அதாவது 2003 மற்றும் தற்போதைய வாக்காளர் பட்டியல் என இரண்டிலும் பெயர் இருப்போர் அல்லது பெற்றோரின் பெயர் இருந்தால் ஒருவர் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை.
வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்
2002 முதல் 2004 வரையில் நடந்த சார் நடவடிக்கை வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அங்கு யார் வேண்டுமானாலும் அதை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் அவர்களே தங்கள் விவரங்களை ஒப்பிட்டுச் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் ஞானேஷ் குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications