ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஷாக்.. 11 பேர் அடைக்கப்பட்டுள்ள ஜெயிலில் சிக்கிய குட்டி செல்போன்.. பரபர!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைதாகி 11 பேர் அடைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி சிறையில் குட்டி செல்போன் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக சம்பவம் நடந்த 4 மணி நேரத்திற்குள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அடுத்த நாள் மேலும் 3 பேர் கைதாகினர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேரும் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பூந்தமல்லி கரையான்சாவடி பகுதியில் தனி கிளைச் சிறை செயல்பட்டு வருகிறது. இந்த தனி கிளைச் சிறையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கைது செய்து அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை சிறைக் கண்காணிப்பு அதிகாரி ஜேம்ஸ் லீ பிரிட்டோ தலைமையில் தனி கிளைச் சிறையில் உள்ள கைதிகளின் ஒவ்வொரு அறையிலும் திடீர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், சிறையில் விரல் அளவு கொண்ட செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மாறன் என்பவரது அறையில் சோதனை செய்த போது ஒரு செல்போன், சிம் கார்டு, 3 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இதையடுத்து, பூந்தமல்லி போலீசாரிடம் சிறைக் காவலர்கள் புகார் அளித்த நிலையில், செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட அந்த அறையில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த விவகாரத்தில் பூந்தமல்லி போலீசார் செல்போன், சிம் கார்டுகளைக் கொண்டு வந்து கொடுத்த நபர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேர் மற்றும் பிரபல ரவுடி படப்பை குணா உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சிறை வளாகத்தில் செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு பூவிருந்தவல்லி தனிக் கிளைச் சிறையில் உள்ள 11 பேருக்கும் 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பூந்தமல்லி சிறையில் குட்டி செல்போன் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு இதில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்பிவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications