ரூ.2 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை.. வருமான வரித்துறைக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் அதிரடி உத்தரவு
சென்னை: ரூ.2 லட்சத்துக்கும் மேல் ரொக்கமாக நடைபெறும் பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரித்துறைக்கு நிதி நிறுவனங்கள் தெரிவிப்பது இல்லையாம்.. இதையடுத்து சொகுசு ஓட்டல்கள், விருந்து அரங்குகள், ஆடம்பர பிராண்ட் விற்பனையாளர்கள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பெரிய அளவில் நடைபெறும் பணப்பரிமாற்றத்தை கண்காணிக்குமாறு வருமான வரித்துறைக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவில் வருமான வரி வசூலிப்பதற்காக 1961ம் ஆண்டு வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் தான் வருமான வரி வசூல், கணக்கீடு மற்றும் நிர்வாகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் முதன்மைச் சட்டமாக இருக்கிறது. இந்த சட்டத்தின்படியே வருமான வரி தொடர்பான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. வரி செலுத்துவோருக்கான உரிமைகள் மற்றும் பொறுப்புகளும் சட்டத்தில் உள்ளது.

இந்த வருமான வரிச் சட்டம் 1961ல், பிரிவு 80C , பிரிவு 80D, பிரிவு 80G, பிரிவு 10(10D) போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள் உள்ளன. இந்த பிரிவுகள் மூலம் வரி செலுத்துவோர் வரி செலுத்துவோர் தங்கள் வரிக்குட்பட்ட வருமானத்திற்கு வரி விலக்குகள் பெற முடியும். இதில் உள்ள சலுகைகளை பயன்படுத்தும் வருமான வரிதாரர்கள் சிலர், வருமான வரியையை குறைக்க நடந்த நிதி பரிவர்த்தனைகளை மறைப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம், வருமான வரித்துறைக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
இது தொடர்பாக மத்திய செயல் திட்டம் 2024-25 என்ற பெயரில் செயல் திட்டம் ஒன்றை நேரடி வரிகள் வாரியம் அண்மையில் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில், நமது நாட்டில் ரூ.2 லட்சத்துக்கும் மேல் ரொக்கமாக நடைபெறும் பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரித்துறைக்கு நிதி பரிவர்த்தனை அறிக்கை மூலம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். ஆனால் சமீப காலமாக அப்படி நடக்கவில்லை. அண்மைக்கால அறிக்கைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆய்வு செய்தபோது, இந்த விதிமீறல் பரவலாக இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
வருமான வரிச்சட்டம் பிரிவு 139 ஏ-ன்படி குறிப்பிட்ட பரிவர்த்தனைகளில் பான் எண் வழங்கப்பட வேண்டும் அல்லது பெறப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால் இந்த விதி சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய எந்த வழிமுறையும் இல்லாத நிலை இருக்கிறது. குறிப்பாக அதிக மதிப்பு கொண்ட செலவினங்களின்போது வரி செலுத்துவோரைப் பற்றிய தகவல்களை சரிபார்க்க வேண்டும். எனவே இதற்கான ஆதாரங்களை வருமான வரித்துறை கண்டறிவது கட்டாயமாகும்.
தற்போதைய நிலையில், சொகுசு ஓட்டல்கள், விருந்து அரங்குகள், ஆடம்பர பிராண்ட் விற்பனையாளர்கள், செயற்கை கருத்தரிப்பு மையங்கள், மருத்துவமனைகள், பெரிய ஆடை வடிவமைப்பாளர் கடைகள், வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டு மருத்துக்கல்வி இடங்களில் பெரிய அளவிலான பணப்பரிமாற்றம் போன்றவற்றில் விதிகள் கடைபிடிக்காததும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே சொகுசு ஓட்டல்கள், விருந்து அரங்குகள், ஆடம்பர பிராண்ட் விற்பனையாளர்கள், செயற்கை கருத்தரிப்பு மையங்கள் உள்பட அதிக பணம் புழங்கும் இடங்களில் பெரிய நிதி பரிவர்த்தனைகளை கண்காணித்து ஆதாரங்களை வருமான வரித்துறை அடையாளம் காண வேண்டும். இது குறித்து விசாரணை நடத்தி சரிபார்க்க வேண்டும்.
இதைப்போல வரி பாக்கி அதிகரித்து வருவது கவலைக்குரியதாக மாறி உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி ரூ.24.51 லட்சம் கோடியாக இருந்த பாக்கி கடந்த ஏப்ரல் 1-ல் ரூ.43 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது மிகவும் அதிகமான உயர்வாகும். இதற்கு உடனடி மற்றும் அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது" இவ்வாறு மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications