விஜய்க்கு 108 சீட்கள்.. ஆனால் 106ல் எதிர்க்கட்சிகள்! ஒவ்வொரு நாளும் திக்திக்! இனிதான் சவாலே இருக்கு
சென்னை: தமிழ்நாடு தேர்தலில் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் கூட பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெல்ல முடியவில்லை. இதனால் அவர் கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். அதேநேரம் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் 100+ எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருப்பது விஜய்க்கு சவாலையே கொடுக்கும்
தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் தவெக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளார் நடிகர் விஜய். ஆனால், விஜய்க்கு இப்போது இருப்பது ஒன்றும் பூப்பாதை அல்ல; அது முட்கள் நிறைந்த கிரீடம் என்று தான் சொல்ல வேண்டும்.

மெஜாரிட்டி இல்லை
தேர்தல் முடிவுகள் விஜய்க்கு வெற்றியைத் தந்தாலும் அவரால் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஒரு மைனாரிட்டி ஆட்சியை நடத்துவது என்பது ஒவ்வொரு நாளும் மரணப் போராட்டமாகவே இருக்கும். தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கியுள்ளன. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், மெஜாரிட்டி இல்லாத ஒரு அரசை நடத்துவது என்பது கத்தி மேல் நடப்பதற்குச் சமம்.
எதிர்க்கட்சிகள்
விஜய்க்கு முன்னால் இருக்கும் மிகப் பெரிய சவால், அவருக்கு எதிராக அமரப்போகும் திமுக மற்றும் அதிமுகவின் அந்த 100க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பலமான எதிர்க்கட்சி வரிசைதான். சட்டமன்றத்தில் நம்பர்கள் தான் எல்லாமே.. நூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருப்பது என்பது இதுவரை தமிழகம் கண்டிராத ஒன்று.
மேலும், எதிரே அமர்ந்திருப்பவர்கள் ஒன்றும் அரசியல் கத்துக்குட்டிகள் அல்ல.. ஒவ்வொரு சட்ட நுணுக்கங்களையும், நெளிவுசுளிவுகளையும் அறிந்தவர்கள். இதனால் பட்ஜெட்டை முதல் புதிய கொள்கைகளை அமல்படுத்துவது வரை, ஒவ்வொரு முறையும் விஜய் ஒரு சட்டமன்றப் போரைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
மைனாரிட்டி ஆட்சி
கூட்டணி ஆட்சி அமைந்தாலும் கூட மைனாரிட்டி ஆட்சி அவ்வளவு சுலபம் இல்லை.. வரலாற்றைத் திரும்பப் பார்த்தால் 2006 கூட்டணி ஆட்சி நமக்கு பல விஷயங்களைக் காட்டுகிறது. அப்போது திமுக தனிப்பெரும்பான்மை இல்லாமல் மைனாரிட்டி ஆட்சியை நடத்தியபோது, கூட்டணிக் கட்சிகள் பெரும் குடைச்சலைக் கொடுத்தது. குறிப்பாக அப்போது கூட்டணியில் இருந்து பாமகவின் நிறுவனர் ராமதாஸ், திமுக ஆட்சிக்கு ஒரு தீராத தலைவலியைக் கொடுத்தார்.
வெளியிலிருந்து ஆதரவு தந்து கொண்டே, ஒரு நிழல் எதிர்க்கட்சியைப் போலச் செயல்பட்டார் என்றே சொல்லலாம். திடீர் திடீரென திமுக அரசுக்கு 'மார்க்' போடுவதும், பொதுவெளியில் விமர்சிப்பதும் அன்றைய வாடிக்கையாக இருந்தது. இதை எல்லாம் சமாளித்தே அப்போது கருணாநிதி ஆட்சியை நடத்தினார். விஜய் என்ன தான் சூப்பர் ஸ்டார் என்றாலும் அவருக்குக் கருணாநிதிக்கு இருந்த அரசியல் ஆளுமை இல்லை. இதனால் கூட்டணியைச் சமாளிப்பது பெரிய சிக்கல் தான்.
சிக்கல் தான்
மேலும், மைனாரிட்டி ஆட்சி மைந்தால் கூட்டணிக் கட்சிகள் சொல்லும் சில பல கண்டிஷன்களை கேட்டு நடக்க வேண்டி இருக்கும். முக்கியமான துறைகளைக் கேட்பது முதல் நிர்வாக மாற்றங்கள் வரை கூட்டணிக் கட்சிகள் கை ஓங்கி இருக்கும். மேலும், சில குறிப்பிட்ட கட்சிகளுடன் கை கோர்த்தால் அது விஜய்யின் க்ளீன் இமேஜ் பிம்பத்தைப் பாதிக்கலாம். எனவே, அதையும் கவனமாகவே கையாள வேண்டும்.
விஜய்யின் இந்த வெற்றி அவரது மக்கள் செல்வாக்கை நிரூபித்துவிட்டது. ஆனால், 100க்கும் மேற்பட்ட பலம் கொண்ட எதிர்க்கட்சியைச் சமாளிப்பதும், கூட்டணிகளைச் சமாளிப்பதும் ஒரு புதிய வகை சதுரங்க வேட்டை. எவ்வித அரசியல் முன் அனுபவமும் இன்றி, இந்த அக்னிப் பரீட்சையில் விஜய் எப்படி வெல்லப்போகிறார்? விஜய்யைப் பொறுத்தவரைத் தேர்தல் என்பது வெறும் 'ட்ரைலர்' தான்; இனிமேல் தான் 'மெயின் பிக்சர்' தொடங்குகிறது. அந்தத் திரைக்கதை அனல் பறக்குமா அல்லது பிரச்சினைகள் வரிசைகட்டி வருமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications