சமஸ்கிருத உறுதிமொழி.. ‘பலிகடா’ ஆக்கப்பட்ட டீன்? 2 மாதமாக சொல்லாதது யார் தப்பு? வெடிக்கும் விவகாரம்!
சென்னை: மதுரை மருத்துவக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் சமஸ்கிருத உறுதிமொழியைச் சொல்லி மருத்துவப் படிப்பு உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
Recommended Video
இந்த விவகாரத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலும் சமஸ்கிருத உறுதிமொழியே எடுக்கப்பட்டதாகவும், மதுரை கல்லூரி முதல்வர் மட்டும் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாகவும் சந்தேகம் கிளப்பப்படுகிறது.

ஹிப்போகிரேடிக் உறுதிமொழி
மருத்துவம் படிக்கும் மாணவர்கள் ஹிப்போகிரேடிக் உறுதிமொழி எடுப்பது வழக்கம். கி.மு.460 முதல் கி.மு.370-ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ஹிப்போகிரேட், 'மருத்துவத்தின் தந்தை' என அழைக்கப்படுகிறார். அவரது பெயரில் உறுதிமொழி ஏற்பது கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவம் படிப்போரின் வழக்கமாக இருந்து வருகிறது. கல்லூரியில் சேரும் நாளன்று வெள்ளை கோட்டுடன் இந்த உறுதிமொழியை மாணவர்கள் எடுப்பார்கள்.

சமஸ்கிருத உறுதிமொழி
இந்நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், தமிழக அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது முதலாம் ஆண்டு மாணவர்கள் ஏற்ற உறுதிமொழியில் சமஸ்கிருத வாக்கியங்கள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. ஹிப்போக்ரடிக்' உறுதிமொழியை ஏற்பதற்குப் பதிலாக மாணவர்கள் சமஸ்கிருதத்தில் 'மகரிஷி சரக் சபத்' என்ற உறுதிமொழி எடுக்க வைக்கப்பட்டனர். மகரிஷி சரக் சபத் உறுதிமொழி எடுக்கப்பட்டதற்குக் கடும் கண்டனம் எழுந்த நிலையில், கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

முதல்வர் தூக்கியடிப்பு
இந்த விவகாரம் தொடர்பாக அரசு வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், "அரசு மருத்துவ கல்லூரியில் நேற்று நடைபெற்ற வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில் 'ஹிப்போக்ரடிக்' உறுதிமொழிக்கு மாறாக 'மகரிஷி சரக் சபத்' என்னும் சமஸ்கிருத உறுதிமொழியை ஏற்க வைத்தது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல். இதனால், மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகிறார். மேலும், தன்னிச்சையாக விதிகளை மீறி மகிரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழியை மாணவர்களை எடுக்க வைத்ததற்கு துறைரீதியாக விசாரணை நடத்துவதற்கு மருத்துவக் கல்வி இயக்குநருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இனி வரும் காலங்களில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் எப்போதும் பின்பற்றப்படும் ஹிப்போக்ரேடிக் உறுதிமொழியை தவறாது ஏற்பதற்கு மருத்துவக் கல்வி இயக்குநர் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்பே சமஸ்கிருத உறுதிமொழி
மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் உள்ள பல மருத்துவக் கல்லூரிகளில், 'மகரிஷி சரக் சபத்' உறுதிமொழி ஏற்கப்பட்டது தெரியவந்துள்ளது. ராமநாதபுரத்தில் கூட இப்படி நடந்துள்ளது. 'ஆயுர்வேதத்தின் தந்தை' என அழைக்கப்படும் மகரிஷி சரகரின் பொன்மொழிகளை மருத்துவ மாணவர்கள் உறுதிமொழியாக எடுக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் இரண்டரை மாதங்களுக்கு முன்னர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்ட நிலையில், தமிழக அரசு தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கு மாறாக, மறுப்பு அறிவிப்போ, சுற்றறிக்கையோ எதுவும் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது

‘டீன்’ பலிகடாவா?
மகரிஷி சரக் சப்த் உறுதி வேண்டாம் என ஹிப்போகிரேடிங் உறுதிமொழியைக் கடைபிடிக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தால், பிப்ரவரி மாதமே அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையை வெளியிட மருத்துவக் கல்வி இயக்குநருக்கு அறிவுறுத்தியிருக்கலாமே அதை விட்டுவிட்டு, இப்போது அமைச்சர்கள் பங்கேற்ற ஒரு மருத்துவக் கல்லூரி விழாவில், மாணவர்கள் உறுதிமொழியேற்றது பிரச்சனையாக்கப்பட்டு, முதல்வர் உடனடியாக தூக்கி அடிக்கப்பட்டுள்ளது ஏன் என்றும் சந்தேகம் கிளப்பப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை இயக்குநரகத்தின் கவனக்குறைவை மறைக்க கல்லூரி முதல்வர் ரத்தினவேல் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாகவும் பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

நியாயமே இல்லை
சமஸ்கிருத உறுதிமொழியில், டீனை மட்டுமே பலி ஆடாக்கி காத்திருப்போர் பட்டியலுக்கு மாறுதல் செய்வது நியாயமற்றது. டீன் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் தேசிய மருத்துவ கல்லூரி இயக்குனரக அறிவுறுதலின்படியே இந்த உறுதிமொழியை ஏற்றதாகவும் மாணவர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், "டீன் ரத்தினவேலுக்கு தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது. ஒரு நல்ல, மூத்த மருத்துவரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை" எனத் தெரிவித்துள்ளார். தேசிய மருத்துவ ஆணைய அறிவுறுத்தலை அரசு கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு , தற்போது சர்ச்சையானதும், கல்லூரி டீன் மீது பாய்ந்து நடவடிக்கை எடுத்துள்ளது மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மத்தியில் விவாதமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications