2 மாதத்தில் குற்றப்பத்திரிகை.. அதிமுக மாஜி அமைச்சர் சம்பத்துக்கு சிக்கல்! ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்சி சம்பத் மீது 2 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதை கேட்ட நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது என அதிரடியாக உத்தரவிட்டது. இந்த உத்தரவு எம்சி சம்பத்துக்கு சாதகமாக இருந்தாலும் 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது என்பது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
அதிமுக, ஆட்சிக்காலத்தில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் எம்.சி.சம்பத். இவரிடம் குமார் என்பவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக உதவியாளராக வேலை செய்துள்ளார்.அப்போது எம்சி சம்பந்தத்திற்கும், உதவியாளர் குமாருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது.

இதில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குமார்,உதவியாளர் பணியில் இருந்து விலகியிருந்தார். இந்த வேளையில் எம்சி சம்பத் தரப்புக்கும், குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதாவது கடந்த 2023-ம் ஆண்டு எம்.சி.சம்பத்தின் சகோதரர் தங்கமணி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் குமாரை தேடி அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.அங்கு அவர் இல்லாததால், அவரது மாமனார் ராமச்சந்திரன், மாமியாா் ஜோதி ஆகியோரை தாக்கி, மிரட்டியதாக பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, எம்.சி.சம்பத் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல, ராஜேந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி எம்.ஜி.சம்பத்தும், ராமச்சந்திரன், குமார், ஜோதி ஆகியோரும் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.
இருதரப்பினரின் மனுக்களும் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் செய்ததால், இருதரப்பினருக்கும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் புலன் விசாரணையும் முடிந்து விட்டது. 2 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, ''குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், மனுதாரர்கள் சட்டப்படி நிவாரணம் தேடிக் கொள்ளலாம். அதனால், இருதரப்பினரும் இந்த நீதிமன்றத்தை ஏற்கனவே நாடியுள்ளதால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை இவர்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications