இந்த நேரம் பார்த்து.. ‘பெயில்’ல கூட வர முடியாதே.. அமர் பிரசாத் ரெட்டியை ‘லாக்’ செய்த திமுக அரசு!
சென்னை: இன்று கைது செய்யப்பட்டுள்ள பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, நீதிமன்ற தொடர் விடுமுறை காரணமாக குறைந்தது 10 நாட்களுக்கு வெளியே வர முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை ஈசிஆர் பனையூரில் அமைந்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வீட்டின் அருகே இருந்த 45 அடி உயர கம்பத்தில், கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு பாஜக ஏற்பாடு செய்திருந்தது. அனுமதி பெறாமல் கொடிக்கம்பம் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் புகார் அளித்திருந்தனர். அதன் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் அந்தக் கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு ஜேசிபி உடன் வந்தனர்.

அப்போது பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் அரசுக்கு எதிராக கோஷமிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதில் போலீசார், பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் மாநகராட்சி அதிகாரிகள் கொடிக்கம்பத்தை அகற்ற கொண்டு வந்த ஜேசிபி இயந்திரத்தையும் கற்களை கொண்டு தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர்.
இதனால் அங்கு ரகளையில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், ஜேசிபியின் கண்ணாடி உடைத்த வழக்கில், கன்னியப்பன், பாலமுருகன், செந்தில் குமார், சுரேந்திர குமார், வினோத்குமார் ஆகியோரை கானாத்தூர் போலீசார் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, குரோம்பேட்டையில் பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 6 பேர் மீதும் அனுமதியின்றி கூடுதல், ஆபாசமாகப் பேசுவது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது, மிரட்டல் விடுப்பது, பொதுச் சொத்தை சேதப்படுத்துவது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பின்னர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பாஜகவினரையும் போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் வரும் நவம்பர் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தாம்பரம் நீதிமன்ற நீதிபதி வர்ஷா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, அவர்கள் 6 பேரும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தமிழ்நாடு பாஜகவில் மிக முக்கிய பொறுப்பில் இருப்பவரும், மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வலதுகரமாக கருதப்படுபவருமான அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள பாஜக நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கைது நடவடிக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமர் பிரசாத் ரெட்டிக்கு, குறைந்தது இன்னும் 10 நாட்களுக்கு ஜாமீன் கிடைக்காது என்றும், அதுவரை அவர் புழல் சிறையிலேயே இருக்க நேரிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிமன்றம் அடுத்த 3 நாட்களுக்கு விடுமுறை என்பதால், அமர் பிரசாத் ரெட்டி இன்று திட்டமிட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என பாஜக நிர்வாகியான கார்த்திக் கோபிநாத் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக நிர்வாகியும், இளையபாரதம் அமைப்பின் நிறுவனருமான கார்த்திக் கோபிநாத் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அமர் பிரசாத் ரெட்டி புழல் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த கைது நடந்த நேரத்தை தான் முக்கியமாக பார்க்க வேண்டும். நீதிமன்றங்களுக்கு 29ஆம் தேதி வரை விடுமுறை. 26ஆம் தேதி (25-ம் தேதி தாக்கல் செய்யும் நாள்) விடுமுறைக் கால நீதிமன்ற அமர்வுகள் நடைபெறும். அன்று ஜாமீன் பெற முடியாவிட்டால் அதன் பிறகு மீண்டும் 30ஆம் தேதிதான் நீதிமன்றம் நடைபெறும். ஆக, பத்து நாட்கள் அமர் பிரசாத்தை சிறையில் அடைத்து வைக்க உள்ளார்கள் அதுதான் திட்டமாகத் தெரிகிறது. பார்ப்போம்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications