மினு மினுத்த 800 கிராம் தங்க காசுகள்! சென்னை நகைப்பட்டறையில் ரூ.80 லட்சம் தங்கத்தை தொட்டதுமே சம்பவம்
சென்னை: தங்கம் விலை இன்று ஒரு சவரன் ரூ.94,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையில் இப்போதைக்கு பெரிய அளவுக்கு மாற்றம் இல்லை என்றும் சொல்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில் நகை திருட்டு சம்பவங்கள் அதிகரித்தபடியே உள்ளன.. பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்களை பொருத்தினாலும், அந்த கேமராவையே அடித்து நொறுக்கிவிட்டு, கொள்ளை சம்பவத்தை நிகழ்த்துகிறார்கள். சென்னையில் இப்போது அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது.. இதனால் தங்கத்தில் முதலீடு செய்வதும் அதிகரித்து வருகிறது. சர்வதேச புவிசார் அரசியல் பதற்றங்கள், பணவீக்கம், உலகளாவிய மற்றும் இந்திய சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, மத்திய வங்கிகளின் தங்கம் வாங்கும் போக்கு, அமெரிக்க டாலரின் பலவீனம் போன்றவை காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தங்கம் நகைகள் விலை
தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், தங்கத்திற்கு பாதுகாப்பில்லாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.. ஏழை, எளிய மக்களால் தங்கம் வாங்குவதை நினைத்துகூட பார்க்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு நடுவில் பாடுபட்டு உழைத்து வாங்கிய தங்க நகைகளையும், கொள்ளையர்கள் திருடி கொண்டு போய்விடுகிறார்கள்.
தங்க நகை திருட்டு அதிகமாவதுடன், இதுதொடர்பான வழக்கு விசாரணைகளும் அதிகரித்து கொண்டே செல்கிறது...இதுகுறித்த வழக்குகளை போலீசார் நடத்தி வந்தாலும், பல்வேறு நகை திருட்டு வழக்குகள் கண்டுபிடிக்க முடியாமல் கிடப்பில் உள்ளதாகவும் தெரிகிறது.
தங்க நகைத் திருட்டு
எனவேதான், . அந்த வழக்குகளின், நிலவரம் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது, ஏடிஎஸ்பி தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும். நகை திருட்டு வழக்கில் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளை விசாரணை நடத்தி கண்டுபிடிப்பதற்காக, திறமை மிக்க காவல் துறை அதிகாரிகளை கொண்ட ஒரு சிறப்பு காவல் பிரிவை மாவட்டந்தோறும் உருவாக்க வேண்டும் என்றும் நீதிபதி புகழேந்தி, ஒரு வழக்கின் உத்தரவில் கூறியிருந்தார்.
அதுமட்டுமல்ல, திருடு போன நகையை போலீசாரால் கண்டுபிடிக்க முடியாவிட்டால், பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் குற்றவாளியை கண்டறிய முடியவில்லை என வழக்கை முடித்தால் அடுத்த 12 வாரங்களில் நகை மதிப்பில் 30% இழப்பீடாக வழங்க வேண்டும்" என்றும் நீதிபதி புகழேந்தி கடந்த வாரம் உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.
சென்னை நகை கடை - பட்டறை
இதோ மீண்டும் ஒரு நகை திருட்டு சென்னையில் நடந்து அதிர்ச்சியை தந்து வருகிறது.. சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்.. இவருக்கு 34 வயதாகிறது..
இவர், யானைக்கவுனியில் 'லக்கரம் கோல்டு ஸ்மித்' என்ற பெயரில் நகை பட்டறை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு தங்க காசு வாங்குவதற்காக 2 பேர் வந்திருக்கிறார்கள்.. உடனே ஜெகதீஸூம் அவர்களுக்கு நகைகளை எடுத்து காட்டியிருக்கிறார்..
800 கிராம் தங்க காசுகள்
பிறகு, பட்டறையின் ரூமுக்குள் சென்று திரும்பி வந்தபோது, மர்ம நபர்கள் மயக்க மருந்தை ஜெகதீஸ் முகத்தில் அடித்து, சரமாரியாக தாக்கி உள்ளனர்.. இதில், ஜெகதீஸ் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.. பிறகு 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 800 கிராம் தங்க காசுகளை அந்த 2 பேரும் எடுத்து கொண்டனர்.. பிறகு அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் அடித்து நொறுக்கிவிட்டு, அதனுடைய DVR-ஐயும் கையோடு எடுத்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டார்கள்.
சிறிது நேரத்தில் ஜெகதீஸூக்கு மயக்கம் தெளிந்து பார்த்தபோதுதான், கடையில் இருந்து 800 கிராம் தங்க காசுகள் கொள்ளை போனது தெரிந்துள்ளது.. உடனடியாக அதே தெருவில் உள்ள உறவினரான சேத்தன் கடைக்கு சென்று நடந்த விஷயங்களை சொல்லி உள்ளார்.
காயங்களுடன் ஜெகதீஸ்
உடம்பு முழுவதும் காயங்களுடன் வந்து நின்ற ஜெகதீஸை பார்த்ததுமே பதறிப்போன சேத்தன், உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்... அங்கு ஜெகதீஸூக்கு சிகிச்சை தரப்பட்டது.. பிறகு யானைக்கவுனி போலீஸில் இதுகுறித்து புகார் தந்தார்.. போலீசாரும், அப்புகாரின்பேரில் விசாரணையை துவங்கி உள்ளனர்..
சம்பந்தப்பட்ட பட்டறைக்கு கைரேகை நிபுணர்களை அழைத்து கொண்டு, நேரடி ஆய்வும் மேற்கொண்டு வருகிறார்கள்.. நகைக்கடையில் சிசிடிவி உடைக்கப்பட்டுள்ளதால், அதே பகுதியிலுள்ள மற்ற சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து, தப்பிச்சென்ற 2 கொள்ளையர்களையும் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications