200 அடியில் லேண்ட்டிங்கை தவிர்த்த ஏர் இந்தியா விமானம்! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை: சிங்கப்பூரிலிருந்து 180 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரையிறங்க முயன்ற நிலையில் 200 அடி உயரத்தில் லேண்டிங்கை தவிர்த்திருந்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் லேசான பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை 10.35 மணியளவில் இந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க இருந்தது. ஆனால் குறுக்கு காற்று இடையூறு காரணமாக விமானத்தின் லேண்டிங் திடீரென ரத்து செய்யப்பட்டது.

விமானம் தரையிறங்கும்போது காற்றின் திசைவேகம் சரியாக இருக்க வேண்டும். ஆனால் சிங்கப்பூர் விமானம் தரையிறங்கும்போது இந்த வேகம் அதிகமாக இருந்ததால் சிக்கல் எழுந்தது. இதனை குறுக்கு காற்று (Crosswinds) என்று அழைப்பார்கள். விமானம் தரையிறங்கும் ஓடுபாதையில் 90° கோணத்தில் காற்று வீசும். இப்படி வீசும் காற்று விமானம் மேல் எழும்புவதற்கும், கீழ் இறங்குவதற்கும் மிகவும் ஆபத்தானவையாகும்.
மீறி விமானத்தை தரையிறக்கினால் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி சென்றுவிடும். இதனால் சக்கரங்கள், இறக்கைகள் சேதமாகலாம். இது மிகப்பெரிய விபத்துக்கு வழிவகுக்கும். எனவே குறுக்கு காற்று வீசும் சமயத்தில் விமானிகள் டேக்-ஆப் செய்வதையும், லேண்டிங் செய்வதையும் தவிர்த்துவிடுவார்கள்.
அப்படித்தான் இன்று காலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானியும் லேண்டிங்கை தவிர்த்திருக்கிறார். இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு 180 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது. தரையிறங்க 200 அடி மட்டுமே இருந்த நிலையில், நிலைமையை உணர்ந்து சுதாரித்துக்கொண்ட விமானி, மீண்டும் வானத்தை நோக்கி விமானத்தை பறக்கவிட்டிருக்கிறார். சென்னையை ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டும் விமானம் பத்திரமாக தரையிறங்கியிருக்கிறது.
கடந்த 2015ம் ஆண்டு இந்த குறுக்கு காற்று பாதிப்பு காரணமாக சர்வதேச அளவில் இரண்டு விமான விபத்துக்கள் நடந்தன. ஒன்று துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தில், துருக்கி பயணிகள் விமானமான TK1878 தரையிறங்க முயன்றபோது கடுமையான குறுக்கு காற்று வீசியது. இதனால் விமானம் ஓடுபாதையை விட்டு விலகியது. சக்கரங்கள் தேசமானதால், பேலன்ஸ் தவறி விமானத்தின் இறக்கை தரையில் மோதி சேதமடைந்தது. நல்வாய்ப்பாக யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டிருந்தது.
இதே ஆண்டு நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸின் MD-88 பயணிகள் விமானம், தரையிறங்கும்போது குறுக்கு காற்று பாதிப்பை எதிர்கொண்டது. இதனால் ஓடுபாதையை விட்டு விமானம் விலகி சென்றது. இதிலும் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. ஆனால் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தது.
மற்ற நாடுகளை விடுங்கள். நமது சென்னை விமான நிலையத்திலேயே கடந்த மார்ச் மாதம் மும்பையிலிருந்து சென்னை வந்த பயணிகள் விமானம் குறுக்கு காற்றை எதிர்கொண்டது. இதனால் விமானத்தின் வால் பகுதி சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications