விஜய் கூட டக்குன்னு கிளம்புனாரு.. நிதின் கட்கரி ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்பு.. சென்னையில் பரபரப்பு
சென்னை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று சென்னை வந்திருந்தார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தனியார் கல்வி நிறுவன நிகழ்வுக்கு சென்ற அவர், மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையம் வர திட்டமிட்டிருந்தார். ஆனால் நிகழ்வில் கால தாமதம் ஏற்பட்டதால், அவரால் குறித்த நேரத்தில் கிளம்ப முடியவில்லை. இதைக் காரணம் காட்டி நிதின் கட்கரியின் ஹெலிகாப்டர் பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியிலிருந்து சென்னைக்கு தனி விமானத்தில் விஜய் திடீரென பறந்து தப்பியது பேசுபொருளாகியிருந்தது. எப்படி இவ்வளவு விரைவாக அவருக்கு அனுமதி தந்தார்கள் என்ற கேள்வி இன்னும் எதிரொலிக்கிறது. இந்த நிலையில்தான் நிதின் கட்கரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஒப்பீடு செய்யப்படுகிறது.
விஷயம் இதுதான்.. மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு வந்திருந்தார். புதுச்சேரியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று சென்னை வந்திருந்தார். சரியாக 2.20 மணியளவில் சென்னை வந்து 2.30 மணியளவில் தனியார் ஹெலிகாப்டர் மூலம் மறைமலை நகர் செல்ல திட்டமிட்டிருந்தார். அங்கிருந்து கார் மூலம் தனியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சென்று கலந்து கொள்ள திட்டமிட்டார்.

ஹெலிகாப்டருக்கு நோ
ஆனால் புதுச்சேரியில் இருந்தே அவர் சென்னைக்கு தாமதமாகத்தான் வந்தார். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த நிகழ்வுக்கு பிறகு நிதின் கட்கரி மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மாலை சென்னை விமான நிலையம் வந்து, 5 மணியளவில் நாக்பூர் செல்வதாக திட்டமாக இருந்தது. தாமதம் காரணமாக விமான நிலைய கட்டுப்பாடு அதிகாரிகள், நிதி கட்கரி ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையம் வருவதற்கு அனுமதி மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், பாதுகாப்புக்காக மாலை 6 மணிக்கு மேல் ஹெலிகாப்டர் இயக்க அனுமதியில்லை. பாதுகாப்புத்துறை தவிர வேறு எந்த ஹெலிகாப்டருக்கும் 6 மணிக்கு மேல் இயக்க அனுமதி இல்லை. இதை சிவில் விமான போக்குவரத்து துறை மற்றும் விமான நிலைய கட்டுப்பாடு அறை அதிகாரிகள் ஸ்ட்ரிக்டாக கடைபிடித்து வருகிறார்கள். அந்த அடிப்படையில் தான் அமைச்சரின் ஹெலிகாப்டர் பயணத்திற்கு கட்டுப்பாட்டு அறையில் அனுமதி மறுக்கப்பட்டது. என்றனர்.
காரில் பயணம்
நிதின் கட்கரியின் பாதுகாப்பு அதிகாரிகளும், சாலை மார்க்கமாக விமான நிலையம் செல்வதே சரி என்று கூறியுள்ளனர். இதனால் அவர் பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இருந்து மாலை 6 மணியளவில் காரில் புறப்பட்டுள்ளார். 6.50 மணியளவில் விமான நிலையம் அடைந்த அவர், 7 மணிக்கு தனி விமானம் மூலம் நாக்பூர் புறப்பட்டு சென்றார். மத்திய அமைச்சரின் ஹெலிகாப்டர் பயணத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications