சென்னை அண்ணா நகரில் தினமும் குடித்துவிட்டு வந்த மருமகனுக்கு மாமியார் தந்த மறக்க முடியாத பரிசு
சென்னை: மாமியார் மருமகள் இடையே வாய் தகராறு ஏற்படுவதை பெரும்பாலான வீடுகளில் பார்த்திருப்பீர்கள்.. மாமியார் மருமகள் சண்டை என்பது பாம்பு கீரி போல் இருக்கும் என்று பலர் நகைச்சுவையாக கூறுவார்கள். அதேநேரம் மருமகன் மற்றும் அவரது மாமியார் இடையே சண்டை என்பது அரிதாகவே கேள்விப்பட்டிருப்போம். ஆனாலும் மகளுக்காக மாமியாரும் மருமகனுடன் சண்டை போட்டிருப்பதை கேள்வி பட்டிருப்போம். சென்னையில் மருமகனை கூலிப்படை ஏவி மாமியார் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
இன்றைக்கு குடிப்பழக்கம் என்பது திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி வரை பெரிய பிரச்சனையாக உள்ளது. குடிப்பழக்கம் என்பது உடல் நலத்திற்கு மட்டுமல்ல, பொருளதார நலனுக்கும், மனநலத்திற்கும், ஏன் ஒட்டுமொத்த சமூகத்திற்குமே கேடு என்றாலும்.. பலர் தொடர்கிறார்கள். ஒரு காலத்தில் குடிப்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், குடிக்காதவர்கள் எண்ணிக்கை அதிகமாவும் இருக்கும். மறைந்து மறைந்து குடிப்பார்கள். இப்போது அப்படி இல்லை.. குடிக்காத மக்கள் எண்ணிக்கை தான் மிக மிக குறைவாக இருக்கும் போல. அந்த அளவிற்கு அதிகமாக உள்ளது.

குடிப்பழக்கத்தால் என்ன சிக்கல்
குடிப்பழக்கம் குடிப்பவர்களை மட்டுமல்ல, அவர்களை நம்பியுள்ள மனைவி, குழந்தைகளையும் பாதிக்கிறது. பல ஏழை மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற முடியாமல் வறுமையுன் வாழ குடிப்பழக்கமே முதல் காரணமாக இருக்கிறது. குடிப்பழக்கம் சிந்தனையை மழுங்கடிக்கிறது . இதனால் குடித்துவிட்டு வருவோர், மனைவி, பிள்ளைகளை மோசமாக நடத்துகிறார்கள். அப்படி ஒரு பெண், ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்த கணவன் குடித்துவிட்டு வந்து தினமும் கொடுமை செய்வதை கண்டு பொறுக்க முடியாமல், தனது அம்மாவிடம் கூறினார். அவரது அம்மா, தனது மருமகனை என்ன செய்தார் என்பதை பார்ப்போம்.
சென்னை அண்ணா நகரில் காதல் திருமணம்
சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 30 வயதாகும் பாபு என்பவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளார். பாபுவுக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
கூலிப்படை ஏவிய மாமியார்
இதனால் தினமும் பாபு குடித்துவிட்டு வந்து மனைவியுடன் சண்டை போடுவது வழக்கமாக இருக்குமாம். இதனால் பாரதி, தனது தாயார் ரசீதாவிடம் அடிக்கடி கூறி வருத்தப்பட்டார். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மாமியார் ரசீதா, சரித்திர பதிவேடு குற்றவாளியான சஞ்சய் சாய் என்பவரை ஏவி, மருமகன் பாபுவை தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் சென்னை ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமியார் ரசீதா மற்றும் சஞ்சய் சாயை கைது செய்தனர். கூலிப்படையைச் சேர்ந்த சஞ்சய் சாய் கொடுத்த தகவலால் மாமியாரும் வசமாக சிக்கினார். மருமகனை மாமியார் கூலிப்படையை ஏவி தாக்கிய சம்பவம் சென்னை ஜெஜெ நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மருமகனுக்காக சிறைக்கு போகும் மாமனார்
சென்னையில் இப்படி என்றால் கள்ளக்குறிச்சியில் மாமானார் ஒருவர், வீட்டுக்கு வந்த மருமகனுக்கு குழம்பு வைப்பதற்காக கோழியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க முயன்றுள்ளார். அந்த குண்டு பாய்ந்து பக்கத்து வீட்டுக்காரர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கொட்டபுப்புத்தூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்டது மேல்மதூர் என்ற கிராமத்தில் அண்ணாமலை என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள மலைப்பகுதியில் நாட்டு துப்பாக்கியை வைத்து விலங்குகளை வேட்டையாடி வந்தாராம்.
மருமகனுக்கு கோழி விருந்து
இந்நிலையில் அண்ணாமலை வீட்டுக்கு அவரது மருமகன் வந்துள்ளார். வீட்டுக்கு வந்த மருமகனுக்கு கோழி அடித்து குழம்பு வைக்க முடிவு செய்தாராம் அண்ணாமலை. இதனையடுத்து வீட்டின் வெளியே சுற்றித் திரிந்த கோழி ஒன்றை பிடிக்க அவர் நினைத்தார். ஆனால், அந்த கோழி அவரது கையில் சிக்கவே இல்லையாம். அதனை தான் வைத்திருக்கும் துப்பாக்கியை வைத்து சுட்டுப் பிடிக்க முடிவு செய்தார். வீட்டின் உள்ளே மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்த அண்ணாமலை, அந்த கோழியை குறி பார்த்து சுட்டிருக்கிறார்.
நடந்தது என்ன
ஆனால், அந்த கோழி அண்ணாமலையில் துப்பாக்கிக் குண்டில் சிக்காமல் ஓடி விட்டது. அப்போது துப்பாக்கியில் இருந்து சீறிப் பாய்ந்த குண்டு, பக்கத்து வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த பிரகாஷ் என்ற இளைஞரின் தலையில் பாய்ந்துள்ளது. இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இது குறித்து கரியாலூர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பிரகாஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கியால் தவறுதலாக சுட்ட அண்ணாமலையை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications