நரகத்திலிருந்து இப்போதைக்கு விடுதலையில்லை.. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அவலம்
சென்னை: சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையின் ராணிப்பேட்டை-வாலாஜாபேட் பிரிவு விரிவாக்கம் திட்டம் மீண்டும் தாமதமாகியுள்ளது. இத்திட்டத்திற்கான டெண்டர், 'நிர்வாகக் காரணங்களுக்காக' ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் இதுவரை 18 முறை ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றாக இருந்த சாலையை விரிவாக்கம் செய்யப்போவதாக கூறி இடித்து குண்டும் குழியுமாக்கி வாகன ஓட்டிகளை கொடுமைப்படுத்திவரும் நெடுஞ்சாலை ஆணையம், வேலையை முடிக்காமல் வாகன ஓட்டிகளுக்கு நரக அனுபவத்தை கொடுத்து வருகிறது.

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாலாஜாபேட்டை இடையே தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் இரு திசைகளிலும் பயணிக்கும் பயணிகளுக்கு வெளியில் சொல்ல முடியாத கொடுமைகளை பரிசாக அளித்து வருகிறது. சுமார் 70 கிமீட்டர் தூரம் ரூ.1187.62 கோடி செலவில் ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 2018 ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டன. இப்போது வருடம் 2024, ஆனால் ஒரு பலனும் கிடைக்கவில்லை. அப்படியே விட்டிருந்தால் கூட சிறப்பாக இருந்திருக்கும் இந்த ரூட்டை நாசப்படுத்தி இதுவரை எந்த முடிவுக்கும் கொண்டுவராமல் இழுத்தடித்து வருகிறது நெடுஞ்சாலைத்துறை.
மத்திய அரசின் அனுமதி இல்லை: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்ட இந்த திட்டம், மத்திய அரசின் கதி சக்தி திட்டத்தின் கீழ் ஒப்புதலை எதிர்நோக்கி, ஏலம் நிலையில் இருந்து வருகிறது. இருப்பினும், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இன்னும் நிர்வாக ஒப்புதலை வழங்கவில்லை. இதனால் புதிய திட்டம் வகுக்கப்படும் வரை இந்த நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலையாகவே செயல்படும்.
ரூ. 980 கோடி திட்டம் கிடப்பில்: இந்த ரூ. 980 கோடி திட்டம் ராணிப்பேட்டை சிப்காட் முதல் சித்தூர் வரை லாரிகளின் பயண நேரத்தைக் குறைப்பதையும், NH-48ல் ஆரணி மற்றும் திருவண்ணாமலை ஓட்டுநர்கள் பெங்களூர் பயணிக்க வசதி செய்து வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, இது சென்னை துறைமுகங்களிலிருந்து கனரகப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கான முக்கியமான பாதை.

ஸ்ரீபெரும்புதூர்-கிருஷ்ணகிரி சாலை: தற்போதுள்ள சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையின் (NH-48) ஸ்ரீபெரும்புதூர்-கிருஷ்ணகிரி பகுதியில் நடந்து கொண்டிருக்கும் சாலை விரிவாக்கப் பணிகள் கூட நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ராணிப்பேட்டை இடையேயான பகுதியில் 20 இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக இவை இழு இழு என இழுக்கப்பட்டு வருகிறது. எனவே 3 வழிச்சாலை, 1 வழிச்சாலையாக இந்த 20 இடங்களிலும் மாற்றப்பட்டது. இதனால் வாகனங்களின் வேகம் படார் படார் என குறைந்துவிடுகிறது. ஏதோ நகரப்பகுதியில் டிராபிக் சிக்னலில் காத்திருப்பதை போல இந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு மெல்ல மெல்ல மூவ் செய்கின்றன.
டோல் வசூலிப்பதுதான் வியப்பு: பல வருடங்களாக வேலை நடப்பதை போல ஏதோ நடந்துகொண்டிருந்தாலும் போதிய மூலப் பொருள் வழங்குவது, அனுமதி வழங்குவது என எதையும் செய்யாமல் பாவ்லா மட்டுமே நடந்துவருகிறது. சிறப்பாக இந்த பக்கம் 3 வாகனங்கள், மறுபக்கம் 3 வாகனங்கள் போய்க்கொண்டிருந்த சாலையை விரிவாக்கம் செய்கிறேன் என்ற பெயரில் இடித்து விரிவாக்கமும் செய்யாமல், பழைய நிலைமைக்கும் திரும்பாமல், திரிசங்கு சொர்க்கம் போல தொங்கிக்கொண்டுள்ளது இந்த மார்க்கம்.
சாலையை உடைத்துவிட்டதால் வழங்கப்பட்ட சிங்கிள் லேன் மாற்றுச்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் நரக வேதனைப்படுகிறார்கள். இப்படி வேதனையோடு வாகனம் ஓட்டுவோரிடமும் தொடர்ந்து டோல் வசூலிக்கப்பட்டுக்கொண்டேதான் உள்ளது. வாகன ஓட்டிகள் அங்கிருக்கும் டோல்கேட் ஊழியர்களிடம் மனக்குறையை சொல்லி குமுறியபடியே, பணத்தை செலுத்தியபடி நகர்வதை பார்க்க முடிகிறது. ஊழியர்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று வாகன ஓட்டிகளுக்கும் தெரியும். ஆனால் புலம்ப ஆள் கிடைத்தால் போதும் என்ற மனநிலை வாகன ஓட்டிகளுக்கு. இருப்பினும், இந்த பிரச்சினையை சரி செய்ய தொடர்பாக அரசியல் அழுத்தம் தரப்படவில்லை.

விபத்துகள் அதிகரிப்பு: "போதுமான தடுப்புகள் மற்றும் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் இல்லாததால் பல ஓட்டுநர்கள் மாற்றுப் பாதைகள் இருக்கும் இடங்களில் திடீரென பிரேக் பயன்படுத்துகிறார்கள், இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இரவு வாகனம் ஓட்டுவது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கிறது," என்று குமுறுகிறார் இந்த சாலையை அடிக்கடி பயன்படுத்தும் கணேஷ்.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நெடுஞ்சாலையில் 520க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தின் கண்டனம்: தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தின் எஸ் யுவராஜ், சென்னை மற்றும் பெங்களூரு இடையே ஏறக்குறைய 10 வருடங்களாக பெரிய சாலை அமைப்பு திட்டங்கள் குறித்து பேசியும், எதுவும் முழுமையாக முடிவடையவில்லை என கண்டனம் தெரிவித்துள்ளார். "டெண்டர் இழுபறி இருப்பது, மத்திய அரசின் அனுமதி இல்லாதது தென் மாநிலங்களின் வளர்ச்சி நோக்கி அலட்சிய மனப்பான்மையை காட்டுகிறது," என்று அவர் கூறினார்.

நெடுஞ்சாலை ஆணையத்தின் அலட்சியம்: நெடுஞ்சாலை ஆணையம், நூற்றுக்கணக்கான கோடிகளை டோல் கட்டணமாக வசூலிக்கிறது ஆனால் இந்த பகுதியை பராமரிக்க சிறிதும் செலவிடவில்லை. ஆரம்பத்தில், கட்டுமான பொருட்கள் பற்றாக்குறை மற்றும் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் நெடுஞ்சாலை ஆணையம் இடையேயான தகராறு காரணமாக தாமதம் ஏற்பட்டது. இப்போது, இந்த திட்டம் எப்போது முடிவடையும் என்பது குறித்து எந்தவொரு கருத்தையும் தர நெடுஞ்சாலை ஆணையம் மறுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications