கடவுள் இருக்காரு குமாரு.. சென்னை- திருவண்ணாமலை ரயில் பயணிகளின் சத்தம் காதுக்கு போயிடுச்சு.. ஹேப்பி
சென்னை: சென்னை கடற்கரை-திருவண்ணாமலை இடையே கழிவறையுடன் கூடிய மின்சார ரயில்கள் விரைவில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு தினமும் அதிவேக மின்சார ரயில் இயக்கப்பட்டு வந்தது. சென்னை கடற்கரையில் மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில், வேலூர் கண்டோன் மென்ட்டிற்கு இரவு 9.35 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில், வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. சென்னையில தினமும் வேலைக்கு சென்று வர இந்த மின்சார ரயிலை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பாஸ்ட் மின்சார ரயில் என்பதால் முக்கியமான ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்பதால் பயனுள்ளதாக இருந்தது.

இந்த ரயிலை திருவண்ணாமலை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தத. உலக புகழ்பெற்ற சிவ திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்த ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீபம் என சிறப்பு நாட்களில் பக்தர்கள் லட்சக்கணக்கில் வந்து செல்கிறார்கள். இவர்களின் வசதிக்காக பவுர்ணமி கிரிவலத்தையொட்டி ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில் ஏற்கனவே இயக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதனிடையே தினசரி ஒரு ரயிலை திருவண்ணாமலைக்கு தினமும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
ஆனால் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் சேவை இல்லை. பஸ்கள் மூலம்தான் பெருமளவில் பக்தர்கள் செல்லும் நிலை இருந்து வந்தது. இதையடுத்து வேலூர் வரை இயக்கப்படும் பாஸ்ட் மின்சார ரயில், திருவண்ணாமலை வரை நீட்டித்தால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும் என்று ரயில்வே போர்டுக்கு கோரிக்கை பறந்தது.
இதை பரிசீலித்த ரயில்வே தலைமையகம் சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு இயக்கப்படும் ஃபாஸ்ட் மின்சார ரயிலை திருவண்ணாமலை வரை நீடிக்க கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இதன்படி கடந்த மே 3ம் தேதி முதல் சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு இயக்கப்படும் ஃபாஸ்ட் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீடிக்கப்பட்டது.
இந்த ரயில் தினமும் மாலை 6 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு இரவு 9.35க்கு வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு வரும். அங்கிருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு பென்னாத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி ரோடு, மடிமங்கலம், போளூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று இறுதியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடைகிறது.
இதேபோல மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து தினமும் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு 5.40 மணிக்கு வந்து சேருகிறது. பின்னர் வேலூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 9.50 மணிக்கு வந்து செல்கிறது. சுமார் 6 மணி நேரம் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு மின்சார ரெயிலில் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.
மொத்தம் 12 பெட்டிகள் கொண்ட இந்த மின்சார ரயிலில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்ல கட்டணம் 50 ரூபாய் கட்டணம் ஆகும். வெறும் 50 ரூபாய் கட்டணத்தில் திருவண்ணாமலைக்கு சென்னை கடற்கரையில் இருந்தே போக முடியும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிவிரைவான லோக்கல் ரயில் என்பதால் சென்னை சுற்றுவட்டார பகுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். திருவண்ணாமலை வேலூர் பகுதி மக்களும் இந்த ரயிலில் சந்தோஷத்தில் உள்ளனர்.
திருவண்ணாமலை கோவிலுக்கு செல்ல இந்த ரயிலை அதிகளவிலான பயணிகள் பயன்படுத்தி வரும் நிலையில், இதில் ஒரே ஒரு குறை இருக்கிறது. திருவண்ணாமலைக் வரை, 6 மணி நேரம் இயற்கை உபாதைகளை கூட கழிக்க முடியாமல் குழந்தைகளும், பெண்களும், வயதானவர்களும் சிரமம் அடைகிறது.
எனவே, இந்த ரயிலில் ஒவ்வொரு பெட்டிலும் கழிவறை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப கழிவறையுடன் கூடிய மின்சார ரெயில் பெட்டிகள் இந்த ரெயிலில் இணைத்து இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் மின்சார ரெயில்களை பொறுத்தவரையில் கழிவறை வசதி இல்லாத ரெயில் பெட்டிகளே ஐ.சி.எப். மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பயணிகள் கழிவறை வசதியுடன் கூடிய ரயில் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று கழிவறையுடன் கூடிய மின்சார ரெயில்கள் பெட்டி தயாரிக்கும் பணி பெரம்பூர் ஐ.சி.எப்.பில் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெட்டிகள் முழுமை அடைந்தவுடன் கழிவறை வசதியுடன் கூடிய மின்சார ரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications