மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சைக்கான செலவு.. சென்னை நுகர்வோர் நீதிமன்றம் சூப்பர் உத்தரவு
சென்னை: மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கான செலவு தொகையை ஏதாவது ஒரு காரணத்தை கூறி மறுக்க முடியாது என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துறைமுகசபையில் பணியாற்றிய ஊழியர் தனியார் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதற்கான செலவு தொகையான 26 லட்சத்து 2 ஆயிரம் ரூபாயை சென்னை துறைமுகசபை மறுத்ததது. இந்த நிலையில் மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் சேகரன் என்பவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மன ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ' என் பெயர் சேகரன், நான், சென்னை துறைமுகசபையில் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டேன். நான் பல ஆண்டுகளாக மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்தில் உறுப்பினராக இருந்து வருகிறேன். கடந்த 2016-ம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தேன். இந்த மருத்துவ சிகிச்சைக்காக எனக்கு 26 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் செலவானது. மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்தின் மூலும் இந்த தொகையை அனுமதிக்க சென்னை துறைமுகசபையிடம் விண்ணப்பித்தேன். ஆனால் துறைமுகசபை நிர்வாகம் எனது கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. எனவே, மருத்துவ சிகிச்சைக்கான செலவு தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்" என்று தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு ஆணையத்தின் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை துறைமுகசபை நிர்வாகம் தரப்பில் வாதிடுகையில், 'கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக மனுதாரர் சென்னை துறைமுக சபை நிர்வாகத்திடம் முன் அனுமதி பெறவில்லை. மனுதாரர் மேற்கொண்டுள்ள சிகிச்சையை பொறுத்தமட்டில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சிகிச்சைதான். அவசர சிகிச்சை அல்ல. எனவே, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க முடியாது' என்று தெரிவிக்கப்பட்டது.
ஏற்க முடியாது
தொடர்ந்து சேகரனின் வாதத்திற்கு பின்னர் நுகர்வோர் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- தனியார் மருத்துவமனை நிர்வாகம் திடீரென ஒரு நாள் மனுதாரரை தொடர்பு கொண்டு கல்லீரல் தானம் செய்பவர் தயாராக இருப்பதால் உடனடியாக மருத்துவமனையில் சேருமாறு கூறியதாகவும், இதன்காரணமாகவே உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்ததாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரருக்கு தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள உடனடியாக மருத்துவமனையில் சேருவதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலை உள்ளது. இதுபோன்ற நேரங்களில், சிகிச்சைக்காக முன் அனுமதி பெறவேண்டும் என துறைமுகசபை நிர்வாகம் கூறுவதை ஏற்க முடியாது. மனுதாரர் உண்மையிலேயே மருத்துவ சிகிச்சை மேற்கொண்டாரா? என்பதை தான் பார்க்க வேண்டுமே தவிர ஏதாவது ஒரு காரணத்தை கூறி மறுக்கக்கூடாது.
ஆகவே, மருத்துவ சிகிச்சைக்கான தொகை ரூ.26 லட்சத்து 2 ஆயிரம் ரூபாயை சென்னை துறைமுக சபை, மத்திய அரசின் சுகாதார திட்ட கூடுதல் இயக்குனர் உள்ளிட்டோர் மனுதாரருக்கு வழங்க வேண்டும். சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும்" இவ்வாறு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications