சென்னை மாநகராட்சி பட்ஜெட்: 3 துறைகளுக்கு முக்கியத்துவம்?.. என்னென்ன துறைகள்?
சென்னை: சென்னை மாநகராட்சியின் முக்கிய பிரச்சினைகளுக்கு பட்ஜெட்டில் தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் இன்று 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் மாநகராட்சியின் முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

மழைநீர் வடிகால்
சென்னையில் முக்கியமாக மழைநீர் வடிகால், சுகாதாரம், கல்வித் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் சிங்கார சென்னை திட்டத்திற்கு அரசு ஒதுக்கிய நிதியிலிருந்து நகரை அழகுப்படுத்த தேவையான பணிகளும் அதற்கான நிதியும் ஒதுக்கப்படும் என தெரிகிறது.

பருவமழை
சென்னையில் பருவமழை காலத்தில் மழை நீர் தேங்கி வெள்ள பாதிப்பை ஏற்படுத்தாமல் நிரந்தர தீர்வுக்கான அடிப்படையான வடிகால் கட்டமைப்புகளை ஏற்படுத்தி பாதுகாக்க நடவடிக்கை, தரமான சாலைகள், பொது சுகாதாரம், குப்பை, கொசுவில்லா நகரமாக மாற்றுதல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

டிரோன் மூலம் கொசு ஒழிப்பு
ஏற்கெனவே டிரோன்களில் மருந்து நிரப்பப்பட்டு நீர் நிலைகளில் உள்ள கொசுக்களின் லார்வாக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம், மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை வேகப்படுத்துதல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படலாம்.

50 பக்கங்கள்
கடந்த சில மாதங்களாக சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தயாரிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பட்ஜெட் அறிக்கை 50 பக்கங்களை கொண்டிருக்கலாம் என தெரிகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதோடு சரி இன்னும் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. தற்போது சென்னையின் மக்கள்தொகை அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது. எனவே அதற்கேற்ப மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தப்படலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications