அடடே! வேளச்சேரி ஏரிக்குள் நேரடியாக இறங்கிய ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்.. சென்னை மாநகராட்சி சபாஷ்
சென்னை: நேரடியாக சென்னை வேளச்சேரி ஏரியில் இறங்கிய ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியை விரைவுபடுத்தினார். 137 லோடு ஆகாயத்தாமரைகள் அங்கு அகற்றப்பட்டது. இதேபோல் சென்னை மாநகராட்சி சாலைகள் அமைக்கும் பணியைவும் ஆய்வு செய்து விரைவுபடுத்தினார்.
மழைக்காலம் தொடங்கும் முன்பு சென்னையில் ஆறுகள் மற்றும் கால்வாய்களை சுத்தம் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதேபோல மழை நீர் வடிகால் பணிகளை விரைவாக முடிக்கவும், முடிந்த பகுதிகளில் உடனடியாக சாலைகள் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன.

சென்னை மாநகரம் முழுவதும் பரவலாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு சாலைகள் சீர்குலைந்துள்ளது. மழை வந்தால் என்ன நடக்கும் என தெரியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். இருப்பினும், மழைக்கு முன், சாலைகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இது ஒருபுறம் எனில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆறுகள் மற்றும் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாக ஏரிகளை மற்றும் ஆறுகளை, கால்வாய்களை சுத்தம் செய்தால் தான் பிரச்சனைகள் ஏற்படாது என்பதால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அடையாறு மண்டலம் வார்டு -175, வேளச்சேரி ஏரியில் ஆம்பிபியன் வாகனங்கள் மூலம் ஆகாயத்தாமரை அகற்றப்படும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆய்வு மேற்கொண்டார். வேளச்சேரி ஏரிக்குள் இறங்கிய அவர் ஆகாயத்தாமரையை அகற்றும் பணிகளை பார்த்துவிட்டு, பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். இதுவரை அங்கு 137 லோடு ஆகாயத் தாமரை அகற்றப்பட்டுள்ளது.
ஏரிகளை ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், அதன்பிறகு மடிப்பாக்கம் ராஜேஸ்வரி நகர் 1வது மெயின் ரோட்டில் சாலை சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.
சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளில் சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் மோசமாக உள்ளதாக நீண்ட கால குற்றச்சாட்டுக்களை அடுத்து 5394 சாலைகளை சரி செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. .
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆறுகள் மற்றும் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
— Greater Chennai Corporation (@chennaicorp) July 8, 2023
அடையாறு மண்டலம் வார்டு -175, வேளச்சேரி ஏரியில் ஆம்பிபியன் வாகனங்கள் மூலம் ஆகயத்தாமரை அகற்றப்படும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலர் ஆணையர் டாக்டர் @RAKRI1 இ.ஆ.ப., (1/2) pic.twitter.com/uBNG9coyQX
முதற்கட்டமாக வளசரவாக்கம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் அதிகபட்சமாக 1640 சாலைகளும், நந்தம்பாக்கம், ராமாபுரம், போரூர் மற்றும் வர்த்தக மையத்தை உள்ளடக்கிய ஆலந்தூர் மண்டலத்தில் 773 சாலைகளும், சோழிங்கநல்லூர் மற்றும் பெருங்குடி பகுதிகளில் ஆயிரம் சாலைகளும் சீரமைக்கப்பட உள்ளது. திருவொற்றியூர் மற்றும் மணலியில் 500-க்கும் மேற்பட்ட சாலைகள் மறுசீரமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன், பழுதடைந்த சாலைகளுக்கு முன்னுரிமை அளித்து, உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். அதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும் மற்றும் மழைக்காலத்திற்கு முன்னதாகவே பாதிக்கப்பட்டுள்ள சாலைகள் சீரமைக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications