லூப் சாலையில் ரெடியாகும் பிரம்மாண்டம்: சென்னை மாநகராட்சி சொன்ன மகிழ்ச்சியான செய்தி.. போராட்டம் வாபஸ்
சென்னை: சென்னை மெரினா லூப் சாலையில் நொச்சிக்குப்பம் மீனவர்களுக்காக 6 மாதங்களில் 384 கடைகளுடன் நவீன மீன் மார்க்கெட் அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்த நிலையில், மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
நொச்சிக்குப்பம் மீனவர்களுக்காக, நவீன மீன் மார்க்கெட்டில் 384 கடைகள் கட்டப்பட்டு வருவதாகவும், இந்தக் கடைகளில் வந்து செல்லும் மக்களின் வசதிக்காக 60 நான்கு சக்கர வாகனங்களும், 155 இருசக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கு இட வசதி செய்யப்படுவதாகவும், ஆறு மாதத்தில் திறக்கப்படும் என ஹைகோர்டில் சென்னை மாநகராட்சி அறிவித்த உறுதியை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு மீனவர்கள் நலனிலும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதிலும் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. சென்னை மெரினா கடற்கரை நொச்சிக்குப்பம் லூப் சாலையில் மீனவர்கள் நலனுக்காக போக்குவரத்திற்கு இடையூறின்றி செல்லும் வகையிலும், பொதுமக்கள் எளிதாக மீன்கள் வாங்கிச் செல்லும் வகையிலும் சென்னை மாநகராட்சியால் ரூபாய் 10 கோடி மதிப்பில் நவீன மீன் மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நவீன மீன் மார்க்கெட்டில் 384 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் வந்து செல்லும் மக்களின் வசதிக்காக 60 நான்கு சக்கர வாகனங்களும், 155 இருசக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கு இட வசதி செய்யப்பட்டுள்ளது. மீன் கடைகளின் மேற்கூரை சிந்தடிக் சீட்டால் அமைக்கப்படுகிறது.
ஒவ்வொரு தனிப்பட்ட கடைக்கும் தண்ணீர் வசதியும், கழுவும் வசதியும் மின் வசதியும் செய்யப்படுகிறது. மேலும் கழிவுநீர் அகற்றும் வசதியும், கழிவறை மற்றும் குடிநீர் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப்பணியானது ஆறு மாதத்தில் முடிவடையும்.
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரை நொச்சிக்குப்பம் லூப் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறின்றி ஒழுங்குபடுத்திட சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி காவல்துறையுடன் இணைந்து நொச்சிக்குப்பம் லூப் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறின்றி ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மீனவர்களின் நலனுக்காக தற்போது மெரினா நொச்சிக்குப்பம் லூப் சாலையில் கிழக்கு பக்கம் வியாபாரம் செய்ய நீதிமன்றம் தெரிவித்தபடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
தற்போது மீனவர்களின் நலன் கருதி நொச்சிக்குப்பம் லூப் சாலையின் மேற்குப் பகுதியில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறின்றி உள்ள இடத்தில் மீனவர்கள் மீன் விற்பனை செய்ய எளிதாக இருக்கும் வகையிலும் மீனவர்கள் வாழ்வாதாரத்தினை காத்திடும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சென்னை மாநகராட்சி சார்பில், உயர்நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல்.19) தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் இவ்வழக்கின் விசாரணையை வருகின்ற ஜூன் மாதம் 19ம் தேதி ஒத்திவைத்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை மெரினா லூப் சாலை குறித்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறும் போது, போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் மீன்கடைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்றும் மேலும், யாருக்கும் தரம்சங்கடம் ஏற்படுத்த விரும்பவில்லை எனவும், பொதுசாலை மாநகராட்சி சொத்தல்ல எனவும் அது மக்கள் சொத்து என்றும், சாலையை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது எனவும் இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது என்றும் தெரிவித்தனர்.

கோர்ட் உத்தரவால் வாபஸ்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நொச்சிக்குப்பம் பகுதியில், கடந்த திங்கள்கிழமை முதல் நடத்தி வந்த போராட்டத்தை மீனவர்கள் வாபஸ் பெற்றிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications