காணும் பொங்கல்.. மெரினா பீச் செல்வோர் கவனத்திற்கு.. சென்னையில் செய்துள்ள போக்குவரத்து மாற்றம் என்ன?
சென்னை: காணும் பொங்கலையொட்டி சென்னையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதன்படி மெரினா கடற்கரைக்கு அதிகளவிலான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், காமராஜர் சாலையை பயன்படுத்துவோர் மாற்று வழிகளுக்கு திருப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல், மாட்டுப் பொங்கலை தொடர்ந்து நாளை தமிழ்நாட்டில் காணும் பொங்கல் கொண்டாடப்படவுள்ளது. நண்பர்கள், உறவுகளை ஒருங்கிணைக்கும் நாளாக பார்க்கப்படும் காணும் பொங்கல் நாளில், குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து வெளியில் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பர். நீர்நிலைகள் மற்றும் இயற்கையுடன் பொழுதை கழிக்கவே விரும்புவர்.

அந்த வகையில் சென்னையில் காணும் பொங்கலன்று மெரினா கடற்கரைக்கு செல்வோம் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் நாளை காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் போக்குவரத்தும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி தரப்பில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
இதனால் காமராஜர் சாலையில் பொது மக்கள், சாலையில் அதிகமாகும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படமாட்டாது. ஆனால் மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரை சாலை) அதிகரிக்கும் போது போர்நினைவுச் சின்னத்தில் இருந்து (War Memorial) வரும் வாகனங்கள் வழக்கம் போல் கலங்கரை விளக்கம் (Light House) நோக்கி அனுமதிக்கப்படும்.
கலங்கரை விளக்கத்தில் (Light House) இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக கட்டாயமாக திருப்பப்பட்டு பாரதி சாலை, பெல்ஸ் சாலை, விக்டோரியா விடுதி வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை. பெல்ஸ் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (விக்டோரியா விடுதி சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்)
அதேபோல் கண்ணகி சிலையிலிருந்து பாரதி சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் ஒருவழி பாதையாக செயல்படும் பெல்ஸ் சாலை, பாரதி சாலை சந்திப்பில் இருந்து கண்ணகி சிலை நோக்கி நோ என்ட்ரி ஆகவும் செயல்படும். காமராஜர் சாலையில் இருந்து கலங்கரை விளக்கம் நோக்கி வரும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் 13.00 மணி முதல் 22.00 மணி வரை அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் போக்குவரத்து மாற்றங்களுக்கு ஏற்ப தங்களின் பயணத் திட்டங்களை செய்து கொள்வது உதவியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications