புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம்: கட்டுமான நிறுவன விளக்கத்துக்கு சென்னை மாநகராட்சி மறுப்பு!
சென்னை: கொரோனா சிகிச்சை மையம் அமைத்ததால் புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பில் சேதாரம் எதுவும் ஏற்படவில்லை என்று சென்னை மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. பி.எஸ்.டி கட்டுமான நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் அவல நிலைதான் தற்போது தமிழகத்தின் தலைப்பு செய்தியாக இருக்கிறது.
அதிமுக ஆட்சியில் ரூ.112 கோடியே 60 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த குடியிருப்பின் கட்டிடத்தை தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்வது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கட்டிடத்தின் அவல நிலை
இந்த கட்டிட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கமல் முதல் சீமான் வரை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த கட்டிடத்தின் தரத்தை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். அதன்பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

யாராயினும் நடவடிக்கை
இது தவிர கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆராயாமல் நடவடிக்கை வழங்கிய உதவி பொறியாளர்கள் பாண்டியன், அன்பழகன் ஆகியோர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க எம்.எல்.ஏ பரந்தாமன் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று தா.மோ.அன்பரசன் உறுதி அளித்துள்ளார்.

கட்டுமான நிறுவனம் விளக்கம்
இதற்கிடையே அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சேதம் விளைவித்து, கட்டிடம் சரியில்லை என செய்தியை கிளப்பிவிட்டால், வைப்புத் தொகையான ரூ.1,50,000 செலுத்த தேவையில்லை என்று சிலர் தூண்டிவிட்டதன் காரணமாகவே புளியந்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பற்றி அவதூறு பரப்புகின்றனர் என்று புளியந்தோப்பு கட்டுமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், சென்னை மாநகராட்சி இந்த குடியிருப்பை கொரோனா மையமாக பயன்படுத்தியதால்தான் கட்டிடம் சேதம் அடைந்துவிட்டதாகவும் கட்டுமான நிறுவனம் கூறியிருந்தது.

சென்னை மாநகராட்சி மறுப்பு
இந்த நிலையில் பி.எஸ்.டி நிறுவனத்தின் விளக்கத்துக்கு சென்னை மாநகராட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் அளித்த விளக்கத்தில் கூறி இருப்பதாவது:- கொரோனா சிகிச்சை மையம் அமைத்ததால் புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பில் சேதாரம் எதுவும் ஏற்படவில்லை. சிகிச்சை மையத்துக்கான பொருட்கள் எடுத்துச் சென்றபோதும் குடியிருப்புக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

நாங்கள் காரணமல்ல
ஏனெனில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும்போது அந்த குடியிருப்புக்கு ஒருவர் தூக்கிச் செல்லும் படுக்கைகள் உள்ளிட்ட மிக இலகுரக பொருட்களே பயன்படுத்தப்பட்டன. கடினமான தளவாடங்கள் அல்லது கடினமான பொருட்கள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை. எனவே கட்டுமான நிறுவனம் கூறிய சேதாரத்துக்கும், பாதிப்புக்கும் சென்னை மாநகராட்சி காரணமல்ல. இவ்வாறு சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications