காலிமனைகளில் விடப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவுநீர்.. சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு
சென்னை: பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் வழங்கல் பணிகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளின் கழிவுநீரை அங்குள்ள காலி இடங்களில் விடுவதால் பொதுமக்களுக்கு மிகவும் இடர்பாடுகள் ஏற்படுகிறது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் சாலை சீரமைப்பு மற்றும் பாதாள சாக்கடை பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் மடிப்பாக்கம் உள்பட சில பகுதிகளில் பணிகளை முடிக்க பல சவால்களை சென்னை மாநகராட்சி சந்தித்து வருகிறது. ஏனெனில் அந்த பகுதிகள் எளிதாக தண்ணீர் தேங்கும் பகுதிகள் ஆகும். இங்கு வடிகால் வசதிகள் எதுவும்முறையாக இல்லை. இதனால் சாக்கடைகள் அப்படியே காலிமனைகளில் விடும் சம்பவங்கள் நடக்கிறது.

மழை வந்தால் நிலைமை இன்னமும் மோசமாகிவிடுகிறது. சாக்கடை கழிவுநீருடன், மழைநீரும் பல காலி மனைகளில் தேங்கிவிடுகிறது. இந்நிலையில் காலிமனை வைத்துள்ள சிலர் தங்கள் பகுதிக்குள் தண்ணீர் வந்துவிடக்கூடாது என்பதற்காக மனைக்கு முன்பாக மணல்களை கொட்டி மேடாக்கி வைத்திருக்கிறார்கள். இதனால் அந்த பகுதிகளில் வெள்ளம் போல்தண்ணீர் தேங்கி விடுகிறது.
இதனிடையே சில பகுதிகளில் தண்ணீர் போக வழியே இல்லாத அளவிற்கு கட்டிடங்கள் நீர் வழிப்பாதைகளை மறைத்தும் கட்டப்பட்டுள்ளது. பட்டா நிலங்களாகவும் உள்ளதால் தண்ணீர் போக வழியில்லாமல் நீண்ட நாளைக்கு தேங்கும் நிலை ஏற்படுகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும் என்றால்,சாலைகளின் இருபுறமும் தண்ணீர் செல்ல வடிகால்கள் இருக்க வேண்டும். இந்நிலையில் அப்படியான கட்டமைப்புகள்புதிதாக சென்னையில் சேர்க்கப்பட்ட பகுதிகளில் இல்லை. இதனால் சவாலான நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் மழை நீர் வடிகால்கள் இருந்தாலும். அதற்கான ஓட்டைகளை சிலர் அடைத்துவிடுகிறார்கள். அல்லது மண்ணால் ஓட்டைகள் மூடப்பட்டிருப்பதால் அந்த தண்ணீரும் சாலைகளில் தேங்க ஆரம்பித்துவிடுகிறது. தண்ணீர் தொடர்ந்து தேங்கும் போது சாலைகள் கடும் சேதம் அடைவதும் நடக்கிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2023-24-ம் நிதியாண்டில் ரூ.ஆயிரத்து 30 கோடியில் 11 ஆயிரத்து 248 சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை 3 ஆயிரத்து 877 சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 115 சாலைகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
215 சாலைகளில் சீரமைப்பு பணிகள் இந்த வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் வழங்கல் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளின் கழிவுநீரை அங்குள்ள காலிமனைகளில் விடுவதால் பொதுமக்களுக்கு மிகவும் இடர்பாடுகள் ஏற்படுகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து வார்டுகளிலும் புதுப்பிக்க வேண்டிய சாலைகள் மற்றும் சீரமைப்பு தேவைப்படும் சாலைகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது" இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications