சென்னையில் வீடு, கட்டிடம் கட்டுவோர் அறிய வேண்டிய மேஜர் மாற்றம்.. வருகிற 30-ந் தேதி முதல் அமல்
சென்னை: சென்னையில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது கட்டிடங்களுக்கு சாலை மற்றும் நடைபாதை விளிம்புகளுடன் சாய்வுதளத்திற்கு உடைந்த செங்கற்கள், சுண்ணாம்பு, கட்டிட கழிவு, மண் கலவைகள் போன்றவை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் நடைபாதை விளிம்புகளுடன் கட்டிடங்களை இணைத்திடும் சாய்வுதளம் அமைக்க சென்னை மாநகராட்சி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
சென்னையில் வீடு கட்டுவோர், கட்டிடம் கட்டுவோர், தங்கள் வீடுகளையும், கடைகளையும் சாலையுடன் இணைக்கும் வகையில் சாய்வு தளம் அமைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். அப்படி அமைக்கும் போது அரசின் இடத்தை ஆக்கிரமிப்பது, மழைநீர் வடிகால்களை ஆக்கிரமிப்பது, பொதுப்பாதையை ஆக்கிரமிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

மாநகராட்சி அறிவிப்பு
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், மழை நீர் செல்ல வழியில்லாமல் சாலைகளில் தேங்கும் நிலையும் ஏற்படுகிறது. எனவே இதனை முறைப்படுத்தி, சாய்வுதளம் விஷயத்தில் வழிகாட்டுதல்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஜூன் 30ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. சென்னையில் வீடு கட்டுவோர், கட்டிடம் கட்டுவோர் அறிய வேண்டிய வழிகாட்டுதல்கள் பற்றி பார்ப்போம்.
சாய்வுதளம் அமைப்பது
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளதாவது: "சென்னை மாநகராட்சியினை துாய்மையாக பராமரிக்கும் வகையில் கட்டிடம் மற்றும் இடிபாட்டு கழிவு அகற்றுதல், சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த வழிகாட்டுதல் வெளியிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது கட்டிடங்களுக்கு சாலை மற்றும் நடைபாதை விளிம்புகளுடன் சாய்வுதளத்திற்கு உடைந்த செங்கற்கள், சுண்ணாம்பு, கட்டிட கழிவு, மண் கலவைகள் போன்றவை பயன்படுத்துகின்றனர்.
மழைநீர் வடிகால்
இதனால் தூசி பரவல் மற்றும் காற்று மாசு ஏற்படுகிறது. கட்டுமான கழிவு மற்றும் மண் தூசுகள் மழைநீர் வடிகால்களில் சேர்வதால், மழைநீர் தேங்கி நீர் ஓட்டத்தையும் தடை செய்கிறது. எனவே தான், சாய்வு தளத்திற்கு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கட்டிட கழிவு, உடைந்த செங்கற்களை சாய்வுதள இணைப்புக்கு பயன்படுத்துதல் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக, மரம் அல்லது இரும்பு போன்ற சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாத பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.
போக்குவரத்து
இந்த இணைப்புகள் அமைக்கும் போது, பொது போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், பாதுகாப்பாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், அந்த பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் பராமரிப்புக்கு எவ்வித தடையும் ஏற்படுத்தாமல் இருத்தல் அவசியம் ஆகும். இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வருகிற 30-ந் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்பின், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கட்டிட மற்றும் இடிபாட்டு கழிவு மேலாண்மைக்கான வழிகாட்டுதல்கள், 2025-ன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications