விசிகவை கண்டுக்காத திமுக.. சென்னை மாநகராட்சியில் மீண்டும் உயரும் சொத்து வரி! 6% அதிகரிக்க தீர்மானம்
சென்னை: சென்னை மாநகராட்சியில் மீண்டும் சொத்து வரியை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 6 சதவீதம் வரை உயர்த்துவது தொடர்பாக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தும் திமுகவினர் கண்டுக்கொள்ளாமல் தீர்மானத்தை நிறைவேற்றினர். இதனால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
சென்னை மாநகராட்சி உள்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரிகள் தான் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் கூட வரி வருவாய் மூலம் தான் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சொத்து வரி என்பது சட்டப்படியே ஒவ்வொரு முறையும் உயர்த்தப்பட்டு வருகிறது. அதாவது நகர்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 விதி 264(2)ன்படி நிலம், கட்டடங்கள், வணிக கட்டடங்கள், டவர்கள் உள்ளிட்டவற்றுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்ப சொத்து வரியை ஆண்டுதோறும் மாற்றியமைக்க முடியும். அதிகபட்சமாக 6 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தலாம்.
இதற்கு முன்பு தமிழகத்தில் கடந்த 2022 ஏப்ரல் 1ம் தேதி சொத்து வரி என்பது உயர்த்தப்பட்டது. இந்த சொத்து வரி உயர்வு என்பது சொத்துகளின் அளவு மற்றும் மண்டலங்களை பொறுத்து வேறுபட்டது. சென்னையை எடுத்து கொண்டால் கடந்த ஆண்டு குடியிருப்புகளுக்கான சொத்து வரி என்பது 50 சதவீத்தில் இருந்து 150 சதவீதம் உயர்த்தப்பட்டது. இடம், கட்டத்தின் அளவை பொறுத்து மக்களுக்கான சொத்து வரியில் வித்தியாசம் இருந்தது.
அதேவேளையில் குடியிருப்பு அல்லாத கட்டங்களுக்கான சொத்து வரி என்பது 100 சதவீதத்தில் இருந்து 200 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. காலி இடத்தில் ஒரு சதுர அடிக்கான சொத்து வரி என்பது ரூ.50 பைசாவில் இருந்து ரூ.1 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்ப பதிவு செய்தனர். இந்நிலையில் தான் 2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாநகராட்சியில் மீண்டும் சொத்து வரியை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக சொத்து வரி உயர்த்துவது தொடர்பாக உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் டவுன் பஞ்சாயத்து இயக்குநர் சார்பில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், உள்ளாட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு கடந்த 5ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 6 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு விடுதலை சிறுத்தைகள், அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் மேயர் பிரியா கண்டுக்கொள்ளவில்லை. மாநகராட்சியில் திமுகவுக்கு போதிய அளவு உறுப்பினர்கள் உள்ளதால் இந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இந்த சொத்து வரி உயர்த்தும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்துவது தொடர்பாக விசாரித்தபோது அதற்கான காரணம் என்பது வெளியானது. அதாவது சென்னை மாநகராட்சியில் திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசு சார்பில் இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் சென்னை மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது சில சாலை பணிகள் உள்பட முக்கிய திட்டங்களை முடிக்கும் நோக்கத்தில் சென்னை மாநகராட்சி கேப்பிட்டல் நிதியை பயன்படுத்தி வருகிறது. இதனால் வேறு வழியின்றி சென்னை மாநகராட்சி சொத்து வரியை உயர்த்த திட்டமிட்டு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த தீர்மானத்துக்கு அரசு அனுமதி வழங்கும்பட்சத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் சொத்து வரி என்பது 6 சதவீதம் வரை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications