“100 இடங்களில் காற்றின் தரத்தை அறிவிக்கும் டிஜிட்டல் பலகைகள்”.. சென்னை மாநகராட்சி ஏற்பாடு
சென்னை: சென்னையில் காற்றின் தரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் வைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. காற்று மாசு காரணமாக ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் காற்றின் தரத்தை கண்காணிப்பதற்காக புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் டிஜிட்டல் சென்சார் பலகைகளை அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 100 இடங்களில் பொதுமக்கள் காற்றின் தரம் குறித்து தெரிந்து கொள்வதற்கான சென்சார் போர்டுகளை மாநகராட்சி அமைக்க உள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட நுழைவுவாயில் அருகே டிஜிட்டல் பலகை பொருத்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாத இறுதிக்குள் 100 இடங்களில் காற்றின் தரம் குறித்து அறியும் டிஜிட்டல் பலகைகள் பொருத்தவும் மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. 6 கோடியே 36 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பில் போக்குவரத்து சிக்னல்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பலகைகள் அமைக்கப்பட உள்ளன.
நாள்தோறும் காற்றில் உள்ள தூசுகள், நாசகார வாயுக்களின் விகிதம், காற்றின் வேகம், மழை அளவு, காற்றழுத்தம், வெப்பநிலை உள்ளிட்ட 19 வகையான தரவுகள் உடனுக்குடன் காட்சிப்படுத்தப்படும் என்றும், பிப்ரவரி மாத இறுதிக்குள் டிஜிட்டல் பலகைகள் முழுமையாக அமைக்கப்பட்டுவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சமீபகாலமாக காற்றின் தரம் மோசமாக இருப்பது கண்டறியப்பட்டது. கோடம்பாக்கத்தில் நள்ளிரவு முதல் காலை 7 மணி வரை AQI அளவு 239 முதல் 204 வரை இருந்தது. அரும்பாக்கத்தில், நள்ளிரவு முதல் காலை 5 மணி வரை AQI 223 முதல் 204 வரை பதிவாகியுள்ளது. சூரியன் உதித்த பிறகு, காற்றின் தரம் சற்று மேம்பட்டு மிதமான நிலைக்கு வந்தாலும், நுரையீரல், ஆஸ்துமா, இதய நோய் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் அளவுக்கு மோசமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications