தொழில் உரிமம் இல்லை.. ரிச்சி தெருவில் 4,000 கடைகளுக்கு "சீல்".. அதிரடி காட்டும் சென்னை மாநகராட்சி!
சென்னை: சென்னையில் உள்ள ரிச்சி தெருவில் தொழில் உரிமம் இல்லாமல் நடத்தப்பட்டு வரும் சுமார் 4,000 கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தொழில் உரிமம் பெற அவகாசம் கொடுத்தும், அதை கண்டுகொள்ளாமல் இருந்த கடைகளுக்கு தான் இந்த சீல் வைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது தொழில் உரிமம் பெறாத கடைக்காரர்கள், உடனடியாக அதை பெறுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

செல்போன் டூ கம்ப்யூட்டர் வரை..
சென்னை அண்ணாசாலையின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் பகுதி ரிச்சி தெரு. 1000 ரூபாய் நோககியா செல்போன் முதல் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் வரை இந்த ரிச்சி தெருவில் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் பழுதுபார்க்கும் கடைகளும், அவற்றின் உதிரி பாகங்களை விற்கும் கடைகளும் இங்கு ஏராளம். இதனால் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை ரிச்சி தெருவில் கூட்ட நெரிசல் காணப்படும். குறுகலான தெருவான ரிச்சி தெருவாக சிறிதயும், பெரியதுமாக பல ஆயிரக்கணக்கான கடைகள் அமைந்துள்ளன.

தொழில் உரிமம் பெறாத கடைகள்
இந்நிலையில், இந்த ரிச்சி தெருவில் உள்ள பல கடைகள் தொழில் உரிமம் பெறாமல் நடத்தப்படுவதாக சென்னை மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதன்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அங்குள்ள கடைகளில் கடந்த சில மாதங்களாக ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அப்போது மாநகராட்சி தரவுகளில் உள்ள அளவை விட கூடுதலாக இங்கு சில கடைகள் இருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

ட்ரோன்கள் மூலம் ஆய்வு
இதன்பேரில், ட்ரோன்கள் (ஆளில்லா சிறு விமானம்) மூலமாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மாநகராட்சி அனுமதி இல்லாமல் கூடுதலாக கட்டப்பட்ட கடைகள் அடையாளம் காணப்பட்டன. இதில் சுமார் 4000-க்கும் மேற்பட்ட கடைகள் மாநகராட்சியிடம் உரிமம் வாங்காமல் இயங்கி வருவது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் கடைக்காரர்களிடம் உடனடியாக தொழில் உரிமம் வாங்குமாறு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதற்காக அவர்களுக்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது.

அதிரடி நோட்டீஸ் - அலறும் வியாபாரிகள்
ஆனால், அந்தக் கடைக்காரர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில், அந்தக் கடைக்காரர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சீல் வைப்பதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் விரைவில் ரிச்சி தெருவில் உள்ள சுமார் 4,000 கடைகளுக்கு சீல் வைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மாநகராட்சியின் இந்த அதிரடி நோட்டீஸை சற்றும் எதிர்பார்க்காத கடைக்காரர்கள், தங்கள் கடைகளுக்கு தொழில் உரிமம் பெறும் பணிகளை அவசர அவசரமாக செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications