"மாயத்தோற்றம்" சென்னையில் மழைநீர் தேங்கவில்லையா.. சிறிய மழைக்கே தாங்கவில்லை.. விளாசிய எடப்பாடி!
சென்னை: திமுக ஆட்சியில் அவசர கோலத்தில் செய்யப்பட்ட வடிகால் பணிகள் காரணமாக, சிறிய மழைக்கே தாக்கு பிடிக்க முடியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் தினமும் காலை தொடங்கி இரவு வரை மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இருப்பினும் சென்னை மாநகர் பொறுத்தவரை முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டாலும் சில இடங்களில் இன்னமும் தண்ணீர் தேங்கியுள்ளது. இவற்றை மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி எடுக்கப்பட்டு வருகிறது.

குளம் போல் நீர் தேக்கம்
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், சென்னை மாநகரப் பகுதிகளின் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது.

தவறாக தகவல்
திமுக அரசு சென்னை மாநகர பகுதிகளில் ஒரு சொட்டு நீர் கூட இல்லை என்று கூறி வருகிறார்கள். ஆனால் இன்று எந்த அளவுக்கு தண்ணீர் இருக்கிறது என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. திமுகவினர் தண்ணீர் தேங்கவில்லை என்ற தவறான தகவலை சொல்லி வருகிறார்கள். மழைநீர் வடிகால் வசதி செய்யப்பட்டு தண்ணீர் வடிந்து வருவதாக கூறப்படுவது தவறான தகவல்.

மருத்துவ முகாம் எங்கே?
சில திமுக அமைச்சர்கள், அதிமுக ஆட்சியில் படகில் தான் மக்கள் வந்ததாக விமர்சித்திருந்தனர். ஆனால் மக்கள் இப்போதும் படகில் தான் சென்று வருகிறார்கள். இந்தப் பகுதியில் அமைச்சர்கள், முதல்வர் வந்து பார்க்கவே இல்லை. இதனால் இந்தப் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம் கூட அமைக்கப்படவில்லை. அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

மாயத்தோற்றம்
தொடர்ந்து, கடந்த சில நாட்களாக சிறிய அளவில் தான் மழை பெய்துள்ளது. 5 செ.மீ. மழை பெய்தால், தானாகவே மழை வடிந்துவிடும். இதனை வைத்து மழைநீர் வடிந்துவிட்டதாக திமுகவினர் மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் 30 முதல் 40 செ.மீ. மழை பெய்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. அப்படி மழை பெய்திருந்தால், கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அதிமுகவின் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, சிங்கார சென்னை 2.0 என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார்கள். பருவமழை காலத்தில் அவசர அவசரமாக திமுக பணிகளை தொடங்கியதால் மட்டுமே, இப்போது தண்ணீர் தேங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

அமைச்சர்களின் பொய்
தொடர்ந்து அதிமுக நிதி ஒதுக்கவில்லை என்று திமுக அமைச்சர்களின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, அமைச்சர்கள் பொய் பேசி வருகிறார்கள். தமிழக அரசு மழைநீர் வடிகால் பணிகளை தரமாக செய்யவில்லை. அவசர கோலத்தில் செய்து வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நிதியை வைத்து மட்டுமே, இப்போது திமுகவினர் பணிகளை செய்து வருகிறார்கள். முதல்வர் கூறுவது போல் மக்கள் தமிழக அரசை பாராட்டவில்லை. கனமழையால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்தார்.

முக ஸ்டாலின் என்ன செய்தார்?
தொடர்ந்து, 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிக்கு முன் தமிழகத்தில் யார் ஆட்சியில் இருந்தார்கள். சென்னை மாநகராட்சியின் மேயராக யார் இருந்தார். அப்போது சென்னை மக்களுக்கு தேவையான மழைநீர் வடிகால்களை செய்யவில்லை. நல்ல சாலைகளை அமைக்கவில்லை. உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்த போதும் எந்தப் பணிகளையும் செய்யவில்லை. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தான் வடிகால் பணிகளை மேற்கொண்டோம் என்று தெரிவித்தார்.

திமுக நாடகம்
தொடர்ந்து உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு பற்றிய கேள்விக்கு, தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக ஆட்சிக்கு மாறி மாறி வருகிறது. மத்திய காங்கிரஸ் - திமுக ஆட்சியில் உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு ஆராய்வதற்கான குழு அமைக்கப்பட்டது. அதனால் அனைத்து கட்சி கூட்டம் என்பது மக்களை ஏமாற்றும் செயல். காலம் கடந்து போய், திமுக அரசு தப்பிப்பதற்காக நாடகம் நடத்தி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications