சென்னைவாசிகளே குடிநீர் தரம் எப்படி இருக்கு? குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் முக்கிய உத்தரவு
சென்னை: பொது மக்களிடமிருந்து தொலைபேசி மூலமாகவோ, நேரடியாகவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலம் பெறக்கூடிய குறைகளை சென்னை குடிநீர் வாரியம் உடனக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அதன் மேலாண் இயக்குனர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால். சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தினமும் 600 இடங்களில் குடிநீரின் தரத்தை பரிசோதிக்க வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் இரண்டாவது வாரத்திற்கு பிறகு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மழை அதிகமாக பெய்யும் என்பதால் அப்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து ஒவ்வொரு துறை அதிகாரிகளும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
சின்ன மழைக்கே சென்னை தாங்காது என்கிற நிலையில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் தான் அதிகமான சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும். இந்நிலையில் சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய் தலைமையில், வாரிய தலைமை அலுவலக கூட்ட அரங்கில், பருவமழைக்கு முன்பு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடந்தது.
இக்கூட்டத்தில் சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய் பேசுகையில், "சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீரின் தரம் தினமும உறுதி செய்யப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் 300 குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குடிநீரின் தரம் ஆய்வகம் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.
விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த காலக்கட்டத்தில் குடிநீரின் மாதிரி சேகரிப்பு 600 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். அதாவது தினமும் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 600 இடங்களில் குடிநீரின் தரத்தை பரிசோதிக்க வேண்டும்.
குடிநீரில் குளோரின் அளவு மற்றும் அதில் கலந்துள்ள திடப்பொருட்களின் அளவை (TDS), நாளொன்றுக்கு 2 ஆயிரம் மாதிரிகள் சேகரித்து பரிசோதித்து வருகிறோம். வடகிழக்கு பருவமழை காலக்கட்டங்களில் தினமும் 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
குறிப்பாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்வதற்காக நாள்தோறும் குடிநீர் மாதிரிகள் சேகரிக்க வேண்டும் குடிநீர் விநியோக நிலையங்களுக்குத் தேவையான பிளீச்சிங் பவுடர், படிகாரம், சுண்ணாம்புபோன்றவை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
கழிவுநீர் அடைப்பு ஏற்படும் இடங்களை கண்டறிந்து, தூர்வாரும் இயந்திரங்கள், பெரிய ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் சிறிய ஜெட்ராடிங் இயந்திரங்கள், ஜெட்டிங் மற்றும் உறிஞ்சும் இயந்திரங்கள் மற்றும் கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் என மொத்தமுள்ள 537 இயந்திரங்களும் தயார்நிலையில் வைக்க வேண்டும். மழைக்காலங்களில் கழிவுநீர் அடைப்பு, கழிவுநீர் தேக்கம் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகளைசீர் செய்ய அனைத்து களப்பணியாளர்களும் 24 மணி நேரமும் பணிகளில் ஈடுபடுத்த அறிவுறுத்த வேண்டும்.
சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் உரிய அறிவிப்பு பலகைகள், பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் இந்த திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பொது மக்களிடமிருந்து தொலைபேசி மூலமாகவோ, நேரடியாகவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலம் பெறக்கூடிய குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீரின் தரம் குறித்து பொதுமக்களிடமிருந்து குறைகள் தெரிவிக்கப்படும்போது சம்பந்தப்பட்ட பகுதிகளில் அதிக அளவில் குடிநீர் மாதிரிகள் எடுக்க வேண்டும்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications