1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது!
மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள 1,300-க்கும் மேற்பட்ட முக்கிய ரயில் நிலையங்களை நவீனமயமாக்கி, ரயில் பயணிகளுக்கு உலகத் தரத்திலான வசதிகளை அளிக்கும் நோக்கில் இந்திய ரயில்வே ஒரு மாபெரும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
அம்ரித் பாரத் ரயில் நிலையம் (Amrit Bharat Station Scheme) என்ற பெயரில் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 69 ரயில் நிலையங்களைச் சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இவற்றுள், தென் தமிழகத்தின் பிரதான நுழைவாயிலாகத் திகழும் வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை எழும்பூர் ரயில் நிலையம், சுமார் 842 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒட்டுமொத்தமாக உருமாறப் போகிறது. இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் எழும்பூர் ரயில் நிலையம் கட்டி சுமார் 118 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், தற்போது மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட உள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தை கட்ட எவ்வளவு செலவானது தெரியுமா?

முக்கிய மேம்பாடுகள்
தென்னக ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, எழும்பூர் ரயில் நிலையத்தின் இரு பக்கங்களிலும், அதாவது காந்தி இர்வின் சாலைப் பகுதி மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலைப் பகுதி என இரண்டு பக்கங்களிலும் பிரம்மாண்ட முனையங்கள் (Terminals) கட்டப்படவுள்ளன.
தரைத்தளத்துடன் சேர்த்து 3 அடுக்குக் (G+3) கட்டமைப்பாக அமையவிருக்கும் இந்த புதிய முனையங்களில் அதிநவீனக் காத்திருப்பு அறைகள், டிஜிட்டல் டிக்கெட் வழங்கும் மையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பிரம்மாண்டமான ரூப் பிளாசா (Roof Plaza) போன்ற உலகத் தரத்திலான வசதிகள் உருவாகி வருகிறது.
சரக்குகளை எளிதாகக் கையாளுவதற்குப் பிரத்யேகப் பார்சல் மேம்பாலங்கள், அசுர வேக நகரும் படிக்கட்டுகள் (Escalators) மற்றும் மின்தூக்கிகள் (Lifts) போன்ற உள்கட்டமைப்புகளும் அமையவுள்ளன.
5 மாடி மல்டி லெவல் பார்க்கிங், பட்ஜெட் ஹோட்டல்
வாகனங்களை நிறுத்துவதில் பயணிகளுக்கு ஏற்படும் நீண்ட காலப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரயில் நிலையத்தின் இருபுறங்களிலும் தரைத்தளத்துடன் சேர்த்து 5 அடுக்குக் (G+5) மாடி கொண்ட 'மல்டி லெவல் கார் பார்க்கிங்' (Multi-level Car Parking) வசதிகள் உருவாக்கப்படவுள்ளன. இந்த பார்க்கிங் கட்டிடங்களில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை மிக பாதுகாப்பாக நிறுத்துவதற்கான அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் செய்யப்படவுள்ளன.
இது தவிர, தொலைதூரப் பகுதிகளில் இருந்து வரும் சாமானிய மக்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக இந்த வணிக வளாக உள்கட்டமைப்பிற்குள்ளேயே ஒரு பிரத்யேகப் 'பட்ஜெட் ஹோட்டல்' (Budget Hotel) வசதியும் மிகக் குறைந்த செலவில் அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
எழும்பூர் ரயில் நிலையத்தின் சுவாரஸ்ய வரலாறு!
சென்னை எழும்பூர் ரயில் நிலையம், வெறும் போக்குவரத்து மையம் மட்டுமல்ல, அது ஒரு வரலாற்றுச் சின்னமாகும். ஒருகாலத்தில் திருச்சிராப்பள்ளியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட தென்னிந்திய ரயில்வே அமைப்பால், 1905 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எழும்பூர் ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, 1908 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில் வெறும் 17 லட்சம் ரூபாய் செலவில் இந்த எழும்பூர் ரயில் நிலையம் கட்டப்பட்டது. இன்று 17 லட்சம் ரூபாயில் ஒரு 1BHK வீடு கூட கட்ட முடியாது என்பதே நிதர்சனம், காரணம் பணவீக்கம். இந்த ரயில் நிலையம் புகழ்பெற்ற இன்டோ - சாராசெனிக் கட்டிடக்கலை முறையில், திராவிடக் கலை நயங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து இது வடிவமைக்கப்பட்டது.
அப்போதைய தலைமைப் பொறியாளர் ஹென்றி இர்வின் மற்றும் நிறுவனக் கலைஞர் சி.ஹெச். பேர்ட் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு, பெங்களூரைச் சேர்ந்த சுவாமிநாத பிள்ளை என்பவரால் இந்த எழும்பூர் ரயில் நிலையம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் மாதத்திற்கே சில நூறு ரயில்கள் மட்டுமே இங்கிருந்து இயக்கப்பட்ட நிலையில் மக்கள் தொகை மற்றும் வர்த்தகப் பெருக்கம் காரணமாக, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் இன்று இந்தியாவின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, எழும்பூர் ரயில் நிலையம் வழியாக ஒரு நாளுக்கு 442 புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் 120 எக்ஸ்பிரஸ் ரயில்கள் என ஒட்டுமொத்தமாக 562 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மிக முக்கியமாக, ரயில்கள் அதிகம் புழங்கும் உச்ச நேரங்களில் (Peak Hours) மட்டும் சராசரியாக 24,600-க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த ரயில் நிலையத்தை ஒரே நேரத்தில் பயன்படுத்துகின்றனர்.
இத்தகைய பெரும் கூட்ட நெரிசலைக் கையாள்வதற்கும், சர்வதேசத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளைச் சாமானிய மக்களுக்கு வழங்குவதற்கு மத்திய அரசு சுமார் 842 கோடி ரூபாய் மெகா சீரமைப்புத் திட்டத்தை தற்போது கையில் எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications