சென்னை எலக்ட்ரிக் ரயில் சேவை: 21 நாட்கள் சேவை முடக்கம்.. அரக்கோணம் மக்களுக்கு பாதிப்பு!
சென்னை புறநகர் பகுதிகளில் மிக முக்கியமான போக்குவரத்து வழியாக விளங்குவது அரக்கோணம் - திருத்தணி மின்சார ரயில் சேவையாகும். இந்த வழித்தடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.
வேலைக்குச் செல்லும் அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் அன்றாடத் தேவைகளுக்காகப் பயணிக்கும் பொதுமக்கள் என பலரும் இந்த மின்சார ரயில்களை அதிகம் நம்பியுள்ளனர். குறிப்பாக சென்னைக்கு வெளியே உள்ள சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களை சென்னையுடன் இணைக்கும் முக்கிய இணைப்புப் பாதையாக இது திகழ்கிறது. இந்த வழித்தடத்தில் சுமார் 21 நாட்கள் ரயில் சேவையில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பயணிகள் பாதுகாப்பு மற்றும் ரயில் இயக்கப் பாதுகாப்புக்கு மேம்படுத்துவதற்காக, அரக்கோணம் யார்டில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது.
இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையேயான பிரிவில் ஏப்ரல் 26 முதல் மே 16, 2026 வரை இரவு மற்றும் பகல் நேரங்களில் லைன் பிளாக் / பவர் பிளாக் அமல்படுத்தப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் இயக்கப்படும் MEMU மற்றும் EMU மின்சார ரயில்களின் சேவையில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பராமரிப்பு பணி நேரம்
அரக்கோணம் யார்டில் ஏப்ரல் 26 முதல் மே 16 வரை இரண்டு நேரங்களில் பணிகள் நடைபெறும். இரவு 00:45 மணி முதல் அதிகாலை 02:15 மணி வரை (1 மணி 30 நிமிடங்கள்) மற்றும் மதியம் 12:45 மணி முதல் 13:45 மணி வரை (1 மணி நேரம்) பணிகள் நடைபெறும். இந்தப் பணிகள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படுகின்றன.
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்
ஏப்ரல் 26 முதல் மே 16, 2026 வரை பின்வரும் இரண்டு EMU ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. திருத்தணியில் இருந்து அரக்கோணம் நோக்கி 21:15 மணிக்குப் புறப்படும் ரயில் எண் 43552 மற்றும் 23:10 மணிக்குப் புறப்படும் ரயில் எண் 43554 ரத்து செய்யப்படுகிறது.
ஏப்ரல் 27 முதல் மே 17, 2026 வரை பின்வரும் இரண்டு EMU ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அரக்கோணத்தில் இருந்து திருத்தணி நோக்கி அதிகாலை 04:00 மணிக்குப் புறப்படும் ரயில் எண் 43551 மற்றும் 05:00 மணிக்குப் புறப்படும் ரயில் எண் 43553 ரத்து செய்யப்படுகிறது.
பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்
ஏப்ரல் 26 முதல் மே 16, 2026 வரை மூன்று ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து அரக்கோணம் நோக்கி காலை 11:00 மணிக்குப் புறப்படும் ரயில் எண் 43411, திருவள்ளங்காடு மற்றும் அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் திருத்தணியில் இருந்து மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் நோக்கி 12:35 மணிக்குப் புறப்படும் ரயில் எண் 43512, திருத்தணி மற்றும் திருவள்ளங்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
அடுத்தாக மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து அரக்கோணம் நோக்கி இரவு 22:55 மணிக்குப் புறப்படும் MEMU ரயில் எண் 66009, திருவள்ளங்காடு மற்றும் அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
பயணிகளுக்கு ஏற்படும் தாக்கம்
அரக்கோணம் - திருத்தணி வழித்தடம் சென்னை புறநகர் பகுதி மக்களுக்கு மிக முக்கியமானது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில்களைப் பயன்படுத்தி அலுவலகம், கல்லூரி மற்றும் சந்தைக்குச் சென்று வருகின்றனர். இந்த மாற்றங்கள் காரணமாக அன்றாட பயணிகள் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். இதனால் MEMU மற்றும் EMU மின்சார ரயில் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
தெற்கு ரயில்வே இந்தப் பராமரிப்பு பணிகளை விரைவாக முடித்து சேவையை இயல்பு நிலைக்குக் கொண்டு வர உறுதியுடன் உள்ளது. பயணிகள் தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ ஆப், வெப்சைட் அல்லது நிலைய அறிவிப்புகளை தொடர்ந்து கண்காணித்து பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த மாற்றங்கள் தற்காலிகமானவை மற்றும் பயணிகள் பாதுகாப்புக்கு உதவும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளன.














Click it and Unblock the Notifications