கெட்டு போன சீஸ்! பிசுபிசுத்த சிக்கன் துண்டுகள்! டொமினோஸ் பீட்சா சாப்பிட்ட 6 வயது சிறுமிக்கு வாந்தி!
சென்னை: சென்னையில் டொமினோஸில் ஆர்டர் செய்த சிக்கன் பீட்சாவில் சிக்கன் பிசுபிசுவென இருந்தது. அழுகிய வாடையும் வீசியதாக பெண் வாடிக்கையாளர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வாடிக்கையாளர் கூறுகையில் என் பெயர் ஜீவிதா. திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூரை சேர்ந்தவர். டொமினோஸில் 3 பீட்சாக்களை ஆர்டர் செய்திருந்தேன். ஒன்று சிக்கன் , இன்னொன்று வெஜ், மற்றொன்று ஹாட் சீஸ் ஆகிய மூன்றை ஆர்டர் செய்திருந்தேன். இன்னும் சில சிக்கன் உணவுகளையும் ஆர்டர் செய்திருந்தேன்.

நான் ஆர்டர் செய்திருந்த 20 நிமிடங்களில் டெலிவரி வந்துவிட்டது. நான் எப்போதும் உணவு பொருட்களை செக் செய்துவிட்டுத்தான் குழந்தைக்கு கொடுப்பேன். ஆனால் நான் அந்த டெலிவரி பாயை அனுப்பிவிட்டு வருவதற்குள் என் அம்மாவும் 6 வயது குழந்தையும் எடுத்து சாப்பிட்டுவிட்டார்கள்.
அப்போதுதான் எனக்கு அந்த பீட்சாவிலிருந்து கெட்ட வாடை வந்தது. இதனால் நான் வந்து செக் செய்வதற்குள் ஏன் ஓபன் செய்து சாப்பிட்டீர்கள் என கேட்டுக் கொண்டிருந்தேன். எதை சாப்பிட்டீர்கள் என கேட்டு, அதை வாங்கி பார்த்த போது சீஸின் நிறம், கிரே நிறத்தில் இருந்தது.
சிக்கன் பீட்சாவில் சிக்கன் பிசுபிசுவென இருந்தது. முகர்ந்து பார்த்த போது பீட்சா கெட்டு போன வாடை வீசியது. உடனே நான் பீட்சா டெலிவரி செய்தவருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னேன். "நீங்கள் டெலிவரி செய்து 10 நிமிடங்கள் தானே ஆச்சு. அதற்குள் எப்படி கெட்டு போகும்" என கேள்வி எழுப்பினேன்.

சீஸில் மேற்பகுதியில் கிரே நிறத்தில் ஏன் இருக்கிறது, ஏதோ ஒரு லேயர் மாதிரி இருக்கிறதே ஏன்" என கேட்டேன். அப்போது அவர், எனக்கு தெரியாதுங்க, கடையில் இருக்கும் பெண் நிர்வாகியிடம் கொடுப்பதாக கூறி அவரிடம் போனை கொடுத்தார். "குழந்தை சாப்பிடுவதற்கு ஆர்டர் செய்த பீட்சாவை ஏன் இப்படி டெலிவரி செய்தீர்கள்" என கேட்டுக் கொண்டிருந்த போதே என் மகள் வாந்தி எடுக்கத் தொடங்கினார்.
உடனே அந்த நிர்வாகி விசாரித்துவிட்டு மீண்டும் அழைப்பதாக சொன்னார். ஆனால் அவர் கூப்பிடவே இல்லை. அதனால் நான் போன் செய்தேன். ஆனால் அவர்கள் சரியாக ரெஸ்பான்ஸ் செய்யவே இல்லை. பிறகு மற்ற பீட்சாக்களை எடுத்து பார்த்த போது அவையும் கெட்டு போயிருந்தன.
என் தாய்க்கு வயிற்றுப்போக்கும் வாந்தியும் ஏற்பட்டது. என் குழந்தைக்கும் அதீத காய்ச்சல் வாந்தி இருக்கிறது. மருத்துவர்கள் மருந்து கொடுத்துள்ளனர். நான் சாப்பிடுவதற்காக ஒரு பீட்சா ஆர்டர் செய்திருந்தேன். நான் கர்ப்பமாக இருக்கிறேன். ஒரு வேளை அந்த பீட்சாவை சாப்பிட்டிருந்தால் என் நிலை என்னவாகியிருக்கும் என நினைக்கவே பயமாக இருக்கிறது.

கொடுத்த காசுக்கு தரமான உணவு கொடுக்காத டொமினோஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையில் புகார் அளித்துள்ளோம். உணவு பாதுகாப்பு துறைக்கும் போன் செய்து புகார் அளித்துள்ளோம். எல்லையம்மன் கோயிலுக்கு அருகே உள்ள டொமினோஸ் பீட்சாவில்தான் இந்த நிலை இருந்தது.
டொமினோஸில் கேட்ட போது, "இந்த பீட்சாக்களை நாங்கள் தயாரிக்கிறது கிடையாது. எங்களுக்கு வரும் பீட்சாக்களை நாங்கள் தயார் செய்து தருகிறோம். மேனேஜரிடம் விஷயத்தை கூறியுள்ளோம், அவர் உங்களை சந்திப்பார்" என தெரிவித்தனர். ஆனால் யாரும் இதுவரை என்னை சந்திக்கவில்லை. இவ்வாறு அந்த தாய் பதைபதைப்புடன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications