அக்கவுண்ட்டில் ரூ.6000.. "இவங்களுக்கு" 6 ஆயிரம் பணம் உண்டு.. திருவள்ளூரில் விழுந்த 4.5 லட்சம் டோக்கன்
சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கும் நிவாரண தொகைக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாலரை லட்சம் பேருக்கு நிவாரணத்தொகை கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.. 4 மாவட்டங்களிலுமே பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின.

இதனால், அம்மாவட்ட மக்களால், இப்போதுவரை அந்த துயரத்திலிருந்து மீள முடியவில்லை.. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
நிவாரண தொகை: இதற்கு பிறகு 6000 ரூபாய் நிவாரண தொகையை அரசு அறிவித்தது.. ஆனால், எந்த நிபந்தனையும் விதிக்காமல் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமே நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருக்கிறார்... அத்துடன், டபுள் மடங்காக அதாவது 12 ஆயிரம் ரூபாயாக நிவாரணத்தை உயர்த்தி தரும்படி கோரி வருகிறார்.
மற்றொருபுறம், திமுக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததாலேயே, மக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக அதிமுக, பாஜக கட்சிகள் குற்றச்சாட்டுகளை வீசி வருகின்றன..
ஆனால், மக்களுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கிட்டுதான், அரசு தரப்பில் நிவாரணம் தர வேண்டியிருக்கிறது. அந்தவகையில், நிவாரண தொகையை அறிவித்தாலும்கூட, இதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவது, மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
செங்கல்பட்டு: இன்று காலை முதல்வர் ஸ்டாலின் ஒருவிழாவில் பேசும்போதுகூட, "சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என யார், எங்கு பாதிக்கப்பட்டிருந்தாலும் 6000 ரூபாய் நிவாரணம் உறுதியாக வழங்கப்படும். தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று சொல்லி, அதனை செய்து வருகிறோமோ, அதேபோல இதையும் செய்து முடிப்போம் என்று உறுதி தந்துள்ளார்.
அதன்படி, இன்றைய தினம் நிவாரண நிதியாக ரூ.6000 தொகை அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதால், அதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் ஆரம்பமாகி உள்ளன.
இதில், சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இன்றே ஆரம்பம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை திருவள்ளூர் ஆகிய 6 வட்டங்களுக்கும் நிவாரண தொகைக்கான டோக்கன் வழங்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
டோக்கன் பெற்றவர்களுக்கு வருகிற 17-ந்தேதி முதல் அதாவது ஞாயிற்றுக்கிழமை முதல், ரேஷன் கடைகளில் ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சென்னையில் வரும் 17-ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொன்னேரி,கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட வட்டங்களிலுள்ள மக்களுக்கு, நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு பயிற்சி தரப்பட்டிருக்கிறது..
மேலும், இன்று முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 850 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 62 ஆயிரத்து 893 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படுகிறது.
அக்கவுண்ட்டில்: முன்னதாக, அரசு ஊழியர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர் தங்களது பாதிப்பு விவரங்களையும், வங்கி கணக்கு விவரங்களையும் ரேஷன் கடைகளில் வழங்கும் விண்ணப்பங்களுடன் இணைத்து விண்ணப்பிக்கலாம் என்றும் இதில் தகுதியுடையவர்களுக்கு ரூபாய் 6000 நிவாரணத் தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications