பூந்தமல்லியில் மெல்ல மெல்ல மூழ்கிய கார்.. உயிரை துச்சமாக நினைத்து வெளியே வந்த நபர்
சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல்வேறு சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வேலப்பன்சாவடி சர்வீஸ் சாலையில் தனியார் கல்லூரிக்கு முன்பாக தண்ணீர் தேங்கி நிற்கிறது.. இந்த மழை நீரில் வாகனங்கள் அடுத்தடுத்து சிக்கி வருகின்றன. மெல்ல மெல்ல மூழ்கிய காரில் இருந்து உயிரை பணயம் வைத்து வெளியே வந்த நபர் குறித்த வீடியோ பலரையும் அதிர வைத்துள்ளது.
டிட்வா புயல் வலு குறைந்து ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறித்தான் சென்னையை நெருங்கியது. இதன் காரணமாக சென்னையில் இன்று காலை முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. 8 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் எல்லா சாலையிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படாத காரணத்தால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

சென்னையில் காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணி வரை சராசரியாக 68.26 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக எண்ணூர் பகுதியில் 129.90 மி.மீட்டர் மழைபெய்துள்ளது. தென்சென்னை, வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தான் கனமழை பெய்திருக்கிறது.
இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலை, வேலப்பன்சாவடி சர்வீஸ் சாலையில் தனியார் கல்லூரிக்கு முன்பாக இடுப்பளவு மழை நீர் சர்வீஸ் சாலையில் பாய்ந்தோடியது இதனால் இந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அடுத்தடுத்து தேங்கி நிற்கும் மழை நீரில் இருக்கும் பள்ளங்கள் தெரியாமல் வாகனங்கள் தொடர்ந்து சிக்கி வந்தது.
இந்த நிலையில் தனியார் மருத்துவ கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியே காரில் வந்த நபர் தேங்கியிருந்த மழை நீரில் பள்ளம் இருப்பது தெரியாமல் கார் அப்படியே சிக்கியது சிக்கிய காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தது. இதனால் கார் மெல்ல, மெல்ல நீரில் அப்படியே திசை மாறி மூழ்கியது. ஒரு கட்டத்திற்கு மேல் காரில் இருந்து இருக்க முடியாததால் உயிரை பணயம் வைத்து அந்த நபர் காரை அப்படியே விட்டுவிட்டு இடுப்பளவு நீரில் நீந்தி வெளியே வந்தார்.
தொடர்ந்து இந்த பகுதியில் செல்லக்கூடிய வாகனங்கள் அடுத்தடுத்து தேங்கி இருக்கும் மழை நீரில் சிக்கிக் கொள்வதாகவும் இந்த வழியாக வாகனங்கள் செல்லக்கூடாது என போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் யாரும் இங்கு இல்லாததால் தொடர்ந்து இந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் மழை நீரில் சிக்கி கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications