வெள்ளை மாளிகை போல் ஒரு காவல் நிலையம்! தேடி வந்த ஐஎஸ்ஓ தரச்சான்று! தூள் கிளப்பும் காவல்துறை!
சென்னை: சென்னையில் வெள்ளை மாளிகை போல் அமைக்கப்பட்டுள்ள பூக்கடை காவல் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ 9001/2005 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கை சிறப்பாக பரமாரிப்பது, தூய்மையான காவல் நிலைய வளாகம், ஆவணங்களை முறையாக பராமரித்து வருவது உட்பட இன்னும் பல்வேறு சிறப்புகளை பெற்றிருப்பதால் இந்தச் சான்று கிடைத்திருக்கிறது.
சென்னையிலேயே மிகவும் பழமையான காவல் நிலையம் பூக்கடை காவல் நிலையம் என்பதும் அதன் கட்டிடம் மட்டும் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

பழமையான காவல் நிலையம்
சென்னை என்.எஸ்.சி.போஸ் சாலையில் அமைந்துள்ள பூக்கடை காவல் நிலையமானது 1876ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்டதாகும். கடந்த 2006ஆம் ஆண்டு இந்த காவல் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்ட நிலையில் இப்போது முழுமையாக உட்கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டு முழுமையாக வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் டிஜிட்டக் பெயர் பலகையும் பொருத்தப்பட்டுள்ளது.

சூரிய மின் சக்தி
மேலும், புகார் அளிக்க வருபவர்கள் நாம் வந்திருப்பது காவல் நிலையமா என ஒரு நொடி யோசிக்கும் அளவுக்கு அங்கு உட்கட்டமைப்பு அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய மின் சக்தி மூலம் மின்னாற்றலை பெறும் வகையில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. புகார் அளிக்க வருபவர்களின் குழந்தைகள் விளையாடி மகிழ தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் காவல் நிலையம் என்ற எண்ணமே ஏற்படாத வகையில் ஹைஃபையாக மாற்றப்பட்டுள்ளது.

ஐ எஸ் ஓ தரச்சான்று
சட்டம் ஒழுங்கை சிறப்பாக பரமாரிப்பது, காவல் நிலைய வளாகத்தை தூய்மையாக வைத்திருப்பது, ஆவணங்களை முறையாக பராமரித்து வருவது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், உட்பட இன்னும் பல்வேறு சிறப்புகளை பெற்றிருப்பதால் பூக்கடை காவல் நிலையத்துக்கு ஐ எஸ் ஓ தரச்சான்று கிடைத்திருக்கிறது. இதற்கான விழா நேற்று நடைபெற்ற நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் உயர் காவல் அதிகாரிகள், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

முக்கியப் பகுதி
பூக்கடை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் தான் சென்ட்ரல் ரயில் நிலையம், உயர்நீதிமன்றம், மொத்த வியாபார கடைகள், என முக்கியமான இடங்கள் அமைந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications