சென்னை நகை பட்டறையில் சிலிண்டர் வெடித்த விபத்து.. பலி எண்ணிக்கை மேலும் உயர்வு.. சதி வேலை காரணமா?
சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் நகைப்பட்டறையில் கேஸ் கசிந்து சிலிண்டர் வெடித்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 வடமாநில தொழிலாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதன் காரணமாக பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை சவுகார்பேட்டை, சிங்கண்ணன் தெருவில், 4 மாடி கட்டிடத்தில் நகைப்பட்டறை ஒன்று செயல்பட்டு வந்தது. கொல்கத்தாவைச் சேர்ந்த சுமன் பால் பி சோகித் (35) என்பவர் இந்த நகைப்பட்டறையை நடத்தி வந்தார். இந்த நகைப் பட்டறையில் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி ஊழியர்கள் நகைகளை உருக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் நகைப்பட்டறை உரிமையாளர் சுமன் பால் உட்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதனையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தீ விபத்தில் காயம் அடைந்த நகை பட்டறையின் உரிமையாளர் சுமன் பால் கடந்த 26 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
நகைப்பட்டறை ஊழியர்களான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அரவிந்த் தாக்கல் (27), ஜாந்தோ இந்திரஜித், சிமந்தோமால் (47), ராகேஷ் (26) ஆனந்த் (32), சூரஜ் (25) ஆகிய 6 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதில், சிமந்தோமால், ராகேஷ், சூரஜ், அரவிந்த் ஆகிய 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். கடந்த மார்ச் 2ஆம் தேதி பட்டறை ஊழியர் சிமந் தோமல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் நேற்று ராகேஷ் என்பவரும், இன்று பட்டறை ஊழியர்களான சூரஜ் தோலே, அரபிந்த் லங்கல் ஆகிய இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. ஜாந்தோ இந்திரஜித், ஆனந்த் ஆகிய இருவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து குறித்து அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதி வேலையா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications