மெகா தடுப்பூசி முகாம்.. சென்னைக்கு முதலிடம்.. சுகாதார துறையின் பெரும் முயற்சி.. இலக்கை தாண்டி சாதனை
சென்னை: தமிழகத்தில் நேற்று நடந்த மெகா தடுப்பூசி திட்டத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1.85 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் 3-ஆவது அலையை தடுக்க கொரோனா தடுப்பூசி போடுவதுதான் தீர்வு என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள். கொரோனா 2ஆவது அலை படுத்திய பாடால் மக்கள் தற்போது தடுப்பூசி போட முன் வந்துள்ளார்கள்.
தடுப்பூசியின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் 8 மணிக்கு திறக்கப்படும் தடுப்பூசி மையங்களில் அதிகாலை 4 மணி முதல் வரிசையில் காத்திருக்கிறார்கள். இதையடுத்து மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு கூடுதல் தடுப்பூசிகளை கேட்டு பெற்றது.

தமிழகத்தில் 40 ஆயிரம் முகாம்கள்
பொதுமக்கள் தடுப்பூசி போட இன்னலடைய கூடாது என்பதற்காக நேற்றைய தினம் தமிழகத்தில் 40 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி போடும் மெகா திட்டம் நடைபெற்றது. இந்த தடுப்பூசி மையங்களில் மக்கள் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கேரளா மாநிலத்தையொட்டிய தமிழக பகுதிகளில் கூடுதல் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டன.

இலக்கு நிர்ணயம்
இந்த மெகா திட்டத்தின் மூலம் 20 லட்சம் தடுப்பூசிகளை போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த திட்டம் இரவு 7 மணி வரை நடத்தப்பட்டது. இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக 8.36 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதாவது இலக்கு நிர்ணயிக்கப்பட்டது என்னவோ 20 லட்சம்தான். ஆனால் மக்கள் ஆர்வம் காரணமாக 28.36 லட்சம் பேர் போட்டுக் கொண்டனர். 8.43 மணி நிலவரப்படி எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர் முதல் டோஸ், இரண்டாவது டோஸ்களை போட்டனர் என்பது குறித்து சுகாதாரத் துறை பட்டியலை வெளியிட்டுள்ளது.

சென்னை முதலிடம்
அதன்படி சென்னை மாவட்டத்தில் நேற்று 1.85 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு அதிகபட்சமாக தடுப்பூசி போட்ட மாவட்டமாக திகழ்கிறது தலைநகர் சென்னை. சென்னையில் முதல் டோஸை 1,14,760 லட்சம் பேரும் இரண்டாவது டோஸை 70,610 பேரும் என மொத்தமாக 1,85,370 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதற்கு அடுத்த இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இங்கு முதல் டோஸை 1,00,030 பேரும் இரண்டாவது டோஸை 51,355 பேரும் என மொத்தமாக 1,85,370 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

எந்தெந்த மாவட்டங்கள்
இதற்கு அடுத்த இடத்தில் திருப்பூர் மாவட்டம் உள்ளது. இங்கு முதல் டோஸை 99,752 பேரும் இரண்டாவது டோஸை 21,882 பேரும் என மொத்தமாக 1,21,634 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். திருச்சி மாவட்டத்தில் முதல் டோஸை 82,575 பேரும் இரண்டாவது டோஸை 27,757 பேரும் என மொத்தமாக 1,10,332 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கடலூர்
அது போல் மதுரையில் 1,05,036 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 1,01,036 பேரும், ஈரோட்டில் 97,139 பேரும் கடலூரில் 88,190 பேரும் நாமக்கல்லில் 85,375 பேரும், விழுப்புரத்தில் 85,105 பேரும், சேலத்தில் 76,096 பேரும், திருநெல்வேலியில் 75,520 பேரும், கன்னியாகுமரியில் 68,342 பேரும் செங்கல்பட்டில் 66,574 பேரும், கிருஷ்ணகிரியில் 65,232 பேரும், தேனியில் 62,599 பேரும், திருவண்ணாமலையில் 62,599 பேரும் கரூரில் 61,724 பேரும், காஞ்சிபுரத்தில் 60,040 பேரும் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர். இந்த எண்ணிக்கை முதல் டோஸ் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கையாகும்.

விளம்பரங்கள்
ஆக நேற்று நடந்த மெகா தடுப்பூசி திட்டத்தில் முதல் டோஸை 21,07,309 பேர் போட்டுள்ளனர். அது போல் நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் இரண்டாவது டோஸ் போட்டவர்களின் எண்ணிக்கை 7,29,467 ஆகும். எனவே நேற்று ஒரே நாளில் 28,36,776 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் குறைந்தபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 21,029 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். அரசு விழிப்புணர்வையும் தனியார் அமைப்புகள் பரிசு பொருட்கள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான விளம்பரங்களையும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications