தி.மு.க சின்னத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கு.. உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சென்னை: தி.மு.க சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 8 பேரை எதிர்கட்சி உறுப்பினர்களாக கருதக் கூடாதென தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குமக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிகளைச் சேர்ந்த சின்னப்பா, பூமி நாதன், சதன் திருமலை குமார், ராகுராமன், அப்துல் சமத், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், வேல்முருகன் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

தி.மு.க சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்த 8 எம்.எல்.ஏ.க்களையும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களாக கருதக் கூடாது என உத்தரவிடக் கோரி கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:- தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 எம்.எல்.ஏ-க்களையும் எப்படி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களாக கருத முடியும். இது ஜனநாயாகத்தை கேலி கூத்தாக்கும் செயல்.
சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத கட்சிகளை சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டங்களுக்கு அழைக்கக் கூடாது. இந்த எம்.எல்.ஏ.க்களை எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களாக கருதி, சட்டமன்றத்தில் தனி இருக்கை வழங்க கூடாது. இவர்களுக்கு சட்டமன்றத்தில் பேச தனியாக நேரம் ஒதுக்க கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி,நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டசபையில் யார், யாரை எங்கு உட்கார வைக்க வேண்டும் என்பது சட்டசபை சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. சபாநாயகரின் நடவடிக்கை சட்டவிரோதமானது அல்ல. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறினார்கள். மேலும், லட்சுமன ரேகை தாண்டப்படக்கூடாது, இந்த வழக்கில் எந்த பொது நலனும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications