தேன் வடியும் பேச்சில் 13 கோடி ரூபாய் முதலீடு! சேமிப்புத் திட்ட வட்டி ஆசையில் மக்கள்.. சிக்கிய தம்பதி
சென்னை: சேமிப்பு திட்டங்கள் குறித்த பண விவகாரங்களில் மக்கள் அலர்ட்டாக இருக்க வேண்டும்.. குறிப்பாக அதிக வட்டி மற்றும் குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபம் தரும் கவர்ச்சிகரமான சேமிப்பு திட்டங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அங்கீகாரம் பெறாத நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும் முன், அந்நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்வது அவசியம். இல்லாவிட்டால் அதிக ஆசை மோசடிக்கு வழிவகுக்கும்.. இதோ இந்த சம்பவத்தை பாருங்கள்.
மதுரை மாவட்டம் காதைக்கிணறு பகுதியை சேர்ந்த விஜய்கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி சாந்தினி ஆகியோர் மதுரையை தலைமையிடமாக கொண்டு ஒரு தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

தேன் ஒழுக பேசிய தம்பதி
இந்த நிறுவனத்தின் கிளைகள் மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது.. தங்கள் நிறுவனத்தில் சேமிப்பு கணக்கு அல்லது வைப்புத்தொகை தொடங்கினால் அதிக வட்டி வழங்கப்படும் என்றும், மாதாந்திர சீட்டு திட்டங்களில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்றும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை இவர்கள் செய்துள்ளனர்.
இவர்கள் சொன்னதையெல்லாம் உண்மை என்று நம்பிய பொதுமக்கள் தங்களது உழைப்பு காசை லட்சக்கணக்கில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்..
அந்தவகையில், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் இந்த நிறுவனத்தில் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் இணைந்துள்ளார்.. ஓராண்டு முடிந்தவுடன் அவருக்கு 36 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.. ஆனால் முதிர்வு காலம் முடிந்தும் அவருக்கு உரிய தொகை வழங்கப்படவில்லை..
அதிக முதலீடு - வட்டி ஆசை
பணம் தராமல் நிறுவனம் இழுத்தடித்ததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், திண்டுக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.. போலீசாரின் தீவிர விசாரணையில்
விஜய்கிருஷ்ணன், சாந்தினி மற்றும் நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருந்த ஊட்டியை சேர்ந்த ரமேஷ், மதுரையை சேர்ந்த சுப்பிரமணி மற்றும் ஜெய்கணேஷ் உள்ளிட்ட 8 பேர் இணைந்து மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது..
சுமார் 842 பேரிடம் இருந்து 13 கோடி ரூபாய் வரை முதலீடாக பெற்று அந்த பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்துள்ளனர்.. இந்த விவகாரத்தில் ஏற்கனவே விஜய்கிருஷ்ணன் மற்றும் ரமேஷ் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால் முக்கிய குற்றவாளியான விஜய்கிருஷ்ணனின் மனைவி சாந்தினி தலைமறைவாக இருந்தார்.. அவரை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில், அவர் திருச்சி பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சாந்தினியை அதிரடியாக கைது செய்தனர்.
சாந்தினி கைது
கைது செய்யப்பட்ட சாந்தினி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் தலைமறைவாக இருப்பதால் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இது போன்ற கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.. அதிக லாபம் தருவதாக கூறும் நிதி நிறுவனங்களின் உண்மை தன்மையை ஆராய்ந்த பின்னரே முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. இந்த 13 கோடி ரூபாய் மோசடி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..












Click it and Unblock the Notifications