அதிமுக அலுவலகத்தில் திருட்டு.. சி.வி.சண்முகம் புகாரில் நடவடிக்கை என்ன?.. நீதிபதி கேள்வி
சென்னை: அதிமுக அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், பொருள்களை எடுத்து சென்றதாக ஓ.பன்னீர்செல்வம் மீதான புகாரை சிபிஐ விசாரணை கேட்ட வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11-ந் தேதி வானகரத்தில் நடந்தது. அப்போது கட்சியின் ஒற்றை தலைமை கொண்டுவர தீர்மானம் இயற்றப்பட்டது. அதே நேரம் ஓ. பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.
இதை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தடுத்ததால் அங்கு மிகப் பெரிய கலவரம் நடந்தது. பின்னர் அதிமுக அலுவலகம் மூடப்பட்டது. அலுவலக கதவை ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் உடைத்து உள்ளே நுழைந்தனர்.

அதிமுக அலுவலகம்
பின்னர் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பொருள்களை ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் எடுத்துச் சென்று விட்டதால் குற்றச்சாட்டு இருந்தது. இது குறித்து ராயப்பேட்டை காவல்துறையில் சி.வி சண்முகம் சார்பில் திருட்டு புகார் அளிக்கபட்டாது. புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் இந்த புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் மனு தாக்கல் செய்தார்.

காவல்துறை
அதில் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசும், காவல்துறையும் செயல்படுகின்றனர். ஆவணங்களை திருடிய சம்பவத்தை சிவில் பிரச்சினையாக கொண்டு வருகின்றனர். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் தான் சரியாக இருக்கும். அதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

நீதிபதி கேள்வி
இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ரியாஸ் முகமது ஆஜராகி புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிட்டார். இதையடுத்து, சிவி சண்முகம் கொடுத்த புகாரின் மீது பதிவான வழக்கின் நிலை அறிக்கையையும், பதில் மனுவும் தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ஜெயலலிதா கட்டி காத்த கோயில்
எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காட்ட கோயிலின் கதவுகளை காலால் எட்டி உதைத்ததாகவும் எடப்பாடி பழனிசாமி மிகவும் கவலை தெரிவித்தார்.மேலும் ஜெயலலிதாவுக்கு பல்வேறு தரப்பினர் அளித்த பரிசு பொருட்களையும் காணவில்லை என்றும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications