ரெயில்களில் கேட்டரிங் சேவையை எப்போது தொடங்க போகிறீர்கள்?... ரெயில்வேக்கு ஐகோர்ட்டு கேள்வி!
சென்னை: ரெயில்களில் நடமாடும் கேட்டரிங் சேவையை மீண்டும் அனுமதிப்பது குறித்து இந்தியன் ரெயில்வே 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக ரெயில்களில் கேட்டரிங் சேவையை ரெயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் தற்போது சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ரெயில்களில் நடமாடும் உணவு வழங்கல் சேவையை ரெயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துளளது. இந்த நிலையில் ரெயில்களில் நடமாடும் உணவு வழங்கல் சேவைக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரி, இந்தியன் ரெயில்வே டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த புதிய டெண்டரை ரத்து செய்து, உணவு வழங்கல் சேவைக்காக கடந்த முறை உரிமம் பெற்றுள்ளவர்களை அனுமதிக்கக்கோரி இந்தியன் ரெயில்வே நடமாடும் உணவு வழங்குவோர் சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ரெயில்வேயில் பல சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ள நிலையில் உணவு வழங்கல் சேவை மட்டும் இதுவரை துவங்கப்படவில்லை. இதுசம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறையில் கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் சங்கம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி. நீதிமன்றத்தில் கூறுகையில், புதிய டெண்டர் என்பது சிறப்பு ரயில்களுக்கு மட்டும்தான். வழக்கமான ரெயில்களில் உணவு வழங்கலை அனுமதிக்க வேண்டும் என்ற மனுதாரர் சங்கத்தின் கோரிக்கையை பரிசீலிக்க தயாராக உள்ளோம் என்றது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 'கொரோனா ஊரடங்கால் ரெயில்வே உணவு வழங்கல் சேவையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு ரெயில்களில் கேட்டரிங் சேவையை எப்போது தொடங்க போகிறீர்கள்?. இது தொடர்பாக நான்கு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை இந்தியன் ரெயில்வே பிறப்பிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications