சாட்டையை கையில் எடுத்த ஹைகோர்ட்.. இன்னும் எத்தனை பேரின் ரத்தம் தேவை.. பேனர்களை அகற்ற அதிரடி ஆணை!
கடற்கரை சாலையில் அதிமுக பேனர்களை அகற்ற கோர்ட் உத்தரவிட்டுள்ளது
Recommended Video
சென்னை: எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பேனர் வைப்பதில் விதிமீறல்கள் தொடர்கின்றன... விதிமீறி பேனர் வைப்பதும், அதனால் உயிரிழப்பு ஏற்படுவதும் எல்லாம் அரசியல் ஆக்கப்படுகிறது என்று காட்டமாக தெரிவித்த ஐகோர்ட், கடற்கரை சாலையில் உள்ள அதிமுக கொடிகளை அகற்ற அதிரடியாகவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணையில் டூவீலரில் வந்து கொண்டிருந்த 23 வயது சுபஸ்ரீ மீது பிளக்ஸ் பேனர் விழுந்து.. அதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அந்த நேரம் பார்த்து வேகமாக வந்த தண்ணீர் லாரியில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார் சுபஸ்ரீ.
லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். பேனரை அச்சடித்த அச்சகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பேனர் வைத்த அதிமுக கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும், கடுமையான அதிர்வலைகள், அதிருப்திகளுக்கு மத்தியில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உயிரிழப்புகள்
இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று வக்கீல் லட்சுமி நாராயணன் ஐகோர்ட்டில் முறையிடவும் செய்தார். அதற்கு சத்தியநாராயணன், ஷேசசாயி ஆகியோர் கொண்ட அமர்வு நீதிபதிகள், "பேனர் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தனம்தான் காரணம். அரசியல் கட்சியினருக்கு விசுவாசமாகத்தான் அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.

அரசியல்
உயிழப்பு என்றால் 2 லட்சம் கருணை தொகை தந்துவிட்டால் எல்லாம் சரியாயிடும் என்று நினைக்கிறார்கள். எந்த கட்சி, ஆட்சிக்கு வந்தாலும் சரி, பேனர் வைப்பதில் விதிமீறல்கள் தொடரதான் செய்கிறது. இப்படி விதிகளை மீறி பேனர்கள் வைப்பதும், அதனால் உயிரிழப்பு ஏற்படுவதும்.. இது எல்லாமே அரசியல் ஆக்கப்படுகிறது. இன்னும் எத்தனை பேரின் ரத்தம் சாலையில் தேய்க்கப்படவேண்டும் எனவும் பேனர் வைத்தால்தான் விழாக்களில் மக்கள் கலந்து கொள்கிறார்களா? இதுதான் மனித உயிருக்கு அளிக்கும் மரியாதையா" என்று கண்டிப்புடன் கேள்வி எழுப்பினர்.

கண்டனம்
மேலும், "பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தர்வை மதிக்காமல் மக்களின் ரத்தத்தை உறிஞ்சுபவர்களாக அரசு அதிகாரிகள் உள்ளனர். ஒவ்வொரு குடிமக்களின் உயிருக்கும் அரசு அளிக்கும் மதிப்பு இதுதானா? திருமணம், காது குத்து, கடாவெட்டிற்கெல்லாம் பேனர் வைத்து அழைத்தால் தான் அரசியவாதிகள் வருவார்களா? தமிழகத்தில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் பூஜ்ஜிய நிலையில் உள்ளது. இழப்பீடு வழங்கினால் மட்டும் உயிர் திரும்பி வந்து விடுமா?" என்று கேள்விகளால் துளைத்தனர்.

அதிமுக கொடிகள்
பின்னர், சென்னை கடற்கரை சாலையில் வைக்கப்பட்டுள்ள அதிமுக கொடிகளை அகற்றவும் ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர். கடற்கரை சாலை நெடுகிலும் நடுவில் உள்ள சாலை தடுப்பில் அதிமுக கொடிகள் உள்ளன. இந்த கொடிகள் 3 அடிக்கு ஒன்றாக வைக்கப்பட்டுள்ளன.

உத்தரவு
இந்த கொடிகளைத்தான் அகற்ற ஆணை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் தன்னுடைய இல்லத்தில் இருந்து தலைமை செயலகத்துக்கு வருவதை ஒட்டியே கடற்கரை சாலையில் அதிமுக கொடிகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும், கோர்ட்டின் உத்தரவை அடுத்து கடற்கரை சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிகமுகவின் கொடிகள் அகற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரவேற்பு
சென்னை தீவுத்திடலில் உணவு திருவிழாவை துவக்கி வைப்பதற்காக முதலமைச்சர் அங்கு வந்திருந்தார். அதற்காக வைக்கப்பட்ட கொடிகளும் அகற்றப்பட்டு வருகின்றன. ஆளும் தரப்போ, எதிர்தரப்போ... எதுவாக இருந்தாலும், எல்லாமே விதிமீறல் என்பதாலும், பொதுமக்களின் உயிரை கருத்தில் கொண்டும் கட்சி பாகுபாடின்றி நீதிமன்றம் இந்த ஆணையை பிறப்பித்துள்ளது பொதுமக்கள் தரப்பில் வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
