டெண்டர் முறைகேடு.. எடப்பாடிக்கு எதிராக அறப்போர் இயக்கம் செய்தி வெளியிட தடைவிதிக்க ஹைகோர்ட் மறுப்பு
சென்னை: நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எதிராக அறப்போர் இயக்கம் செய்தி வெளியிட தடை விதிக்க மறுப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2016-21-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

அப்போது 2019, முதல் 2021ஆம் ஆண்டுகள் வரையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22-ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
நல்ல நிலையில் உள்ள சாலைகளை மீண்டும் போடுவதற்கு இந்த டெண்டர்களில் சேர்த்ததன் மூலமும், திட்டமதிப்பு அதிகப்படுத்தப்பட்டு இருந்ததாலும், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகாரில் குறிப்பிட்டிருந்தது.
இதுதொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தது. இதனால் தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாளரான ஜெயராம் வெங்கடெஷ், இணை ஒருங்கிணைபாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இடைக்கால தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அறப்போர் இயக்கத்தின் தகவல்கள் அனைத்தும் வெளியாகி விட்டதால், தடை விதிக்க அவசியமில்லை என கூறி வழக்கு விசாரணையை 11-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications