9,525 கோவில்களின் வரவு செலவு கணக்கு தணிக்கை செய்யப்படாதது ஏன்? அறநிலையத்துக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி
சென்னை: தமிழகத்தில், 9,525 கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்படாதது ஏன் என ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் ஆண்டு வருவாய், செலவினங்கள் தொடர்பான கணக்குகளின் தணிக்கை அறிக்கைகளை, இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக்கோரி, மயிலாப்பூரைச் சேர்ந்த இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட் தலைவர் டி.ஆர்.ரமேஷ், கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய, சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறை தரப்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, "தணிக்கை அறிக்கைகளை, அந்தந்த கோவில்களின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, உரிய நடவடிக்கை எடுக்கும்படி கடந்த ஆண்டு டிசம்பர் 19ல் அறநிலையத்துறை ஆணையர், அனைத்து கோவிலின் இணை, உதவி ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
ஆணையர் உத்தரவின்படி, எத்தனை பேர் தணிக்கை அறிக்கைகளை கோவில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இன்னும் யார் யார் உத்தரவை நிறைவேற்றவில்லை என்பதை கண்டறிந்து, நீதிமன்றத்தில் தெரிவிக்க அவகாசம் வேண்டும்" எனக் கோரினார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "கோவில் தணிக்கை அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதை இதுவரை அமல்படுத்தாதது ஏன்? அறநிலையத்துறை இணை, துணை, உதவி ஆணையர்கள் கட்டுப்பாட்டில் உள்ள 9,525 கோவில்களின் கணக்குகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை.
இது குறித்து, 2023 மார்ச் 3 ஆம் தேதி தலைமை தணிக்கை இயக்குநர், அறநிலையத்துறை ஆணையக்கு கடிதம் எழுதி உள்ளார். தணிக்கைக்காக கோவில்களின் கணக்கு விபரங்களை சமர்ப்பிக்காதது ஏன்? அவ்வாறு தணிக்கை செய்யப்படாததற்கான காரணம் என்ன என்பதை, அறநிலைய துறை ஆணையர் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பழனி, திருச்செந்துார் போன்ற, 50 பெரிய கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டிருக்கும். அந்த விபரங்களை விரைந்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
எத்தனை கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன? இன்னும் எத்தனை கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்ய வேண்டியுள்ளது? எத்தனை கோவில்களின் தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன? எத்தனை கோவில்களின் தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை? என்பது குறித்த விபரங்களுடன் விரிவான அறிக்கையை அறநிலையத்துறை ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications