தாமிரபரணி கால்வாய் இணைப்பு திட்டம்: அப்பாவு தொடர்ந்த நீதிமன்ற அவதூறு வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்
சென்னை:தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு கால்வாய் திட்ட பணிகள் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.
தமிழக சட்டசபை சபாநாயகராக இருப்பவர் மு.அப்பாவு. இவர் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ ஆவார். திமுகவின் மூத்த தலைவராக உள்ள மு.அப்பாவு சமீபத்தில் சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
முன்னதாக இவர் தாமிரபரணி ஆற்றில் இருந்து ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி, சாத்தான்குளம் பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

பொதுநல வழக்கு
அதாவது தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 13 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதால் ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி, சாத்தான்குளம் பகுதிகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்காக தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறுகளை இணைக்க 2006-ம் ஆண்டு தமிழக அரசு திட்டமிட்டது. 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப்பிறகு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை விரைவுப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மு.அப்பாவு பொது நல வழக்கு தொடர்ந்தார்.

அவமதிப்பு வழக்கு
இந்த வழக்கில் அரசு தாக்கல் செய்த அட்டவணையின்படி, பணிகளை முடிக்கும்படி 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை என தமிழக அரசுக்கு எதிராக 2017ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அப்பாவு தாக்கல் செய்தார்.

விரைவில் முடிக்கப்படும்
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் 4 கட்டங்களாக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் முதல் இரண்டு கட்டங்கள் முடிவடைந்துள்ளதாகவும், மூன்றாவது கட்டத்தில் 90 சதவீதமும், நான்காவது கட்டத்தில் 50 சதவீதமும் பணிகள் முடிக்கப்பட்டதாக தெரிவிக்க5ப்பட்டது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முடித்து வைப்பு
அதனை ஏற்ற நீதிபதிகள், அரசு தாக்கல் செய்த அட்டவணைப்படி பணிகள் கண்காணிக்க வேண்டுமென அறிவுறுத்தல் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளதாகவும், வேறு எந்த உத்தரவும் 2015ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்படவில்லை என்பதால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாகாது என தெரிவித்து, அப்பாவு தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications